வியாழன், 21 ஜூலை, 2011

பைரவர் மூலமந்திரப் பலன்கள்

மிகப் பிரபல நாளேடான தினத்தந்தி வெள்ளிமலரில் 150 வாரங்களுக்கும் மேலாக அகத்தியர் அருள்வாக்கு எனும் ஜீவநாடித்தொடர் கட்டுரையை எழுதி வந்த தெய்வத்திரு. அகத்தியர் மைந்தன் ஹனுமத்தாசன் அவர்களின் முழுமையான ஆசிகளுடன் அகத்தியர் ஜீவநாடியின் வழிகாட்டுதலின்படி எங்களுக்கு இறைத்திருவருளால் கிடைத்த போகர் சித்தரின் மருத்துவ முறைப்படி நலம் தரும் மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் தெய்வீக மூலிகை மருந்து வகைகள் பொது மக்கள் பயன்பாட்டிற்காக
அனைத்து கர்மாக்களை விலக்கும் பைரவர் ஆசி பெற போகர் அருளிய தீபம் ஏற்றும் தெய்வீக திரவியப்பொடி, 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பைரவர் திருநாமம் மற்றும் பைரவர் ஸ்தலங்கள், பைரவ தீபப் பொடியின் செய்முறை, பலன்கள் பின்வருமாறு

வ. எண் நட்சத்திரங்கள் பைரவர் அருள்தரும் தலம்
1. அசுவினி ஞானபைரவர் பேரூர்
2. பரணி மகாபைரவர் பெரிச்சியூர்
3. கார்த்திகை அண்ணாமலை பைரவர் திருவண்ணாமலை
4. ரோகிணி பிரம்ம சிரகண்டீஸ்வரர் திருக்கண்டியூர்
5. மிருகசிரிஷம் க்ஷேத்திரபாலர் க்ஷேத்ரபாலபுரம்
6. திருவாதிரை வடுக பைரவர் வடுகூர்
7. புனர்பூசம் விஜய பைரவர் பழனி
8. பூசம் ஆஸின பைரவர் ஸ்ரீவாஞ்சியம்
9. ஆயில்யம் பாதாள பைரவர் காளஹஸ்தி
10. மகம் நர்த்தன பைரவர் வேலூர்
11. பூரம் பைரவர் பட்டீஸ்வரம்
12. உத்திரம் ஜடாமண்டல பைரவர் சேரன்மகாதேவி
13. அஸ்தம் யோகாசன பைரவர் திருப்பத்தூர்
14. சித்திரை சக்கரபைரவர் தர்மபுரி
15. சுவாதி ஜடாமுனி பைரவர் பொற்பனைக்கோட்டை
16. விசாகம் கோட்டை பைரவர் திருமயம்
17. அனுஷம் சொர்ண பைரவர் சிதம்பரம்
18. கேட்டை கதாயுத பைரவர் சூரக்குடி
டி.வயிரவன்பட்டி திருவாடுதுறை, தபசுமலை
19. மூலம் சட்டைநாதர் சீர்காழி
20. பூராடம் வீரபைரவர் அவிநாசி, ஒழுகமங்கலம்
21. உத்திராடம் முத்தலைவேல் வடுகர் கரூர்
22. அவிட்டம் பலிபீடமூர்த்தி சீர்காழி, ஆறகழூர்
(அஷ்டபைரவ பலிபீடம்)
23. திருவோணம் மார்த்தாண்ட பைரவர் வயிரவன் பட்டி
24. சதயம் சர்ப்ப பைரவர் சங்கரன்கோவில்
25. பூரட்டாதி அஷ்டபுஜபைரவர் கொக்கரையான்பேட்டை, தஞ்சாவூர்
26. உத்திரட்டாதி வெண்கலஓசை பைரவர் சேஞ்ஞலூர்
27. ரேவதி சம்ஹார பைரவர் தாத்தையாங்கார்பேட்டை

மேற்கூறிய நட்சத்திரக்காரர்கள் பைரவர் ஸ்தலத்தில் விளக்கு ஏற்ற முடியவில்லை என்றால் அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று பைரவருக்கு விளக்கு ஏற்றவும்.
செய்முறை : பைரவர் தெய்வீக மூலிகை பொடியை சிகப்பு துணியால் மட்டும் கட்டி தேய்பிறை அஷ்டமி (அல்லது) ஞாயிற்றுக்கிழமை 4.30 முதல் 6.00 இராகு காலம் நேரத்தில் 64 தீபங்களை முதலில் ஏற்ற வேண்டும். பிறகு பைரவரிடம் தங்களின் குறைகளை மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். வீட்டில் தினமும் காலை இரண்டு தீபம் வீதம் மாலை இரண்டு தீபம் வீதம் சுத்தமான பசுநெய் அல்லது நல்லெண்ணெய் ஆகிய இரண்டில் மட்டும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யவும்.
மூல மந்திரம் :
ஓம் ஹ்ராம் ஹ்ரூம்; ஹ்ரைம்
க்ஷரௌம், ஷம், ஷேத்ரபாலாய நம:
பலன்கள் : திருமணத்தடை, பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பர். கடன் பிரச்சனை விலகும். மனநிலை பாதிப்பு விலகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.
மேலும் விபரங்களுக்கு…..
ஸ்ரீ ஜெயதுர்கா நெய் ஸ்டோர்
எண். 54, பரிபூரண விநாயகர் கோவில் தெரு, மயிலாப்பூர், சென்னை – 4. செல் : 98841 15342,

வயிரவன் கோயில் புராணம்


வடிவுடை அம்பாள் சமேத வளரொளிநாதர் பெருமையையும், வயிரவ சுவாமிகளின் சிறப்பையும் பெரிதும் கூறுவது வயிரவன் கோயிற் புராணம் என்ற செய்யுள் நூலாகும். 19ம் நூற்றாண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட இந்த நூல் சேந்தன்குடி வி. நடராசக் கவிராயரால் இயற்றப்பட்டதாகும். இந்நூல் தேவக்கோட்டை வித்வ சிகாமணி, மேன்மைசால் வீர.லெ.சிந்நயச் செட்டியார் அவர்களால் குறைகள் களைந்து புதுக்கப் பெற்றுத் திருத்தமாக வெளியிடப்பட்டது. கவிச்சிம்புள் எனவும், கல்விச் சிங்கம் எனவும் கீர்த்தி பெற்ற திரு. வீர.லெ.சிந்நயச் செட்டியார் அவர்கள், தமிழ்ச்சங்கம் கண்ட பாண்டித்துரைத் தேவரின் இனிய நண்பர் ஆவார். திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களாலும், சிவத்திரு சொக்கலிங்க ஐயா அவர்களாலும், மகா மகோபாத்தியாய உ.வே.சாமிநாதையர் அவர்களாலும், பெரிதும் மதிக்கப்பட்ட இவர்கள் நகரத்தார் வரலாறு பற்றிய ஆராய்ச்சி செய்து நூல் வெளியிட்டுள்ளார். அன்னாருடைய புலமைத் திறனும், ஆராய்ச்சி வன்மையும், சிவானந்த ஈடுபாடும் பக்திச்சுவை சொட்டும் கவிநயமும் இப்புராணத்தில் விரவிக் காணப்படுகின்றன. வயிரவன் கோயிலுக்கு ஒரு சிறந்த தலபுராணத்தை வெளியிட்டமைக்குச் சிவநேசச் செல்வர்களும், தமிழ் அன்பர்களும் திரு. சிந்நயச் செட்டியார் அவர்களுக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளார்கள். அன்னாருடைய பொன்னார் திருவடிகளைப் போற்றி வணங்குகிறேன்.
இப்புராணத்தில் திருமுறைத் தலங்களின் திருப்பணிகள் பல செய்த நகரத்தார் சமூகத்தினரின் பண்டைய வரலாறும், திருப்பணிகளின் சிறப்பும் கூறப்படுகிறது. மக்கள் நல்வாழ்வு பெறுவதற்கு இறையருள் அவசியம் என்பதையும் இடுக்கண் களைவதற்கும், ஆணவத்தை அகற்றுவதற்கும், இறை வழிபாடு அவசியம் என்பதையும், உணர்ந்து வருந்தி இறைவனை வழிபட்டால் பாவங்களை இறைவன் மன்னிப்பார் என்பதையும் வயிரவன் கோயில் புராணம் வலியுறுத்துகிறது.
பாயிரத்திலுள்ள இறைவணக்கப் பாடல்களும் இந்திரன், ததீசி முனிவர், சுக்கிரன், தேவர்கள் முதலியோர் வளரொளிநாதரையும், வயிரவமூர்த்தியையும், கற்பக விநாயகரையும் துதிக்கும் பாடல்களும் உள்ளத்தை உருக்குபவை. இப்புராணத்தை எளிய உரைநடையில் சுருக்கி ஆக்கித்தருமாறு திருவண்ணாமலை ஆதினப் புலவர், பண்டித வித்வான் மு. முத்துவேங்கடாசலம் அவர்களை வேண்டிக் கொண்டேன். அவர்களும் தம் முதிர்ந்த வயதிலும் இப்பணியைச் செவ்வனே செய்து அதை வெளியிடுவதில் யுக்தானுசாரமாகக் கூட்டியோ, குறைத்தோ செய்து கொள்வதற்கு அன்புடன் எனக்கு அனுமதி அளித்தார்கள். அவர்கள் பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் அவர்களின் நெருங்கிய நண்பரும் ஆவார்கள். அன்னாருக்கு அருள்மிகு மார்த்தாண்ட வைரவர் அருளால் 19.3.95 அன்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதுக்கோட்டை முகாமில் அவருடைய ஞான தானப் பணியைப் பாராட்டிப் பொன்னாடை அணிவித்துச் சிறப்பித்துள்ளார்கள்.
வயிரவன் கோயிற் புராணம் மொத்தம் 17 படலங்களைக் கொண்டதாகும். மொத்தம் 1152 செய்யுட்கள் உள்ளன. அவற்றுள் நாட்டுப் படலம், நகரப் படலம், நைமிசப் படலம், புராண வரலாற்றுப் படலம், தலவிசேடப் படலம், தீர்த்த விசேடப் படலம் ஆகியவற்றைத் தவிர்த்தும், பாயிரத்தைச் செய்யுள் வடிவத்திலேயே கொடுத்தும், எஞ்சிய பத்துப் படலங்களுக்கு எளிய உரைநடைச் சுருக்கம் தரப்பட்டுள்ளது.
வயிரவன் கோயில் தலம் கீழ்க் கண்ட பெயர்களில் இப்புராணத்தில் குறிக்கப்படுகிறது: – வடுகநாதபுரி, வடுகநாதபுரம், வடுகன் மூதூர், வயிரவ நகர், வயிரவ மாபுரம்.
அரக்கர்களால் ஏற்பட்ட துன்பத்தினின்று மீள்வதற்காகத் தேவர்கள் வளரொளிநாதரிடம் அடைக்கலம் புகுந்தனர். அவர்களைக் காப்பாற்ற இறைவன் வயிரவக் கோலம் பூண்டார். கற்பக விநாயகர் தலைமையில் அரக்கர்களை சம்ஹாரம் செய்து, இறுதியில் வயிரவமூர்த்தி அரக்கர் தலைவனை அழித்துத் தேவர்களைக் காப்பாற்றினார். இந்திரன், ததீசிமுனிவர், சந்திரன், சுக்கிரன் முதலியோர் இத்தலத்தில் பூசனை செய்து பாவம் நீங்கினர். புராண நிறைவில் கிரிகரப் படலத்தில் நகரத்தார் வரலாறும், ஒன்பது நகரக் கோயில்கள் ஏற்பட்ட விவரமும் கூறப்படுகிறது. மேலும் இளையாற்றங்குடி, பிள்ளையார்பட்டி ஆகிய தலங்களின் பெருமையும் கூறப்படுகிறது.
சிவபுராணத்தைக் கேட்பதாலும், படிப்பதாலும், உயிர்கள் சிவகதி அடையும் என்று ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.
“திருத்தகு சிவபுராண சிரவண விசேடத்தாலே
உருத்தகு பாவம் நீங்கும் புண்ணியம் ஒருங்குமேவும்
மருத்தகு பத்தி வாய்க்கும் மாதேவன் அருள் உண்டாகும்
கருத்தகு தீமையெல்லாம் கழன்று மேற்கதி உண்டாமால்
-காசி ரகசியம்
எனவே எல்லோரும் இப்பயன்களை அடைய வேண்டும் என்ற கருத்தில் இந்நூலை வெளியிடுகின்றேன்.
வயிரவன்பட்டித் தலச் சிறப்பு
நகர வயிரவன்பட்டித் தலம் காரைக்குடி – திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் பிள்ளையார்பட்டியை அடுத்து அழகிய இயற்கைச் சூழலில் அமைந்துள்ளது. சோழ அரசனால் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாகச் சோழ நாட்டிலிருந்து தென்பாண்டி நாட்டிற்கு வந்த நகரத்தார் சமூகத்தினருக்கு கி.பி. 718ல் ஒன்பது நகரக்கோயில்கள் ஏற்பட்டன. இவ்வொன்பது சிவாலயங்களுள் வடிவுடையம்மை உடனாய வளரொளிநாதர் திருக்கோயிலும் ஒன்றாகும்.
“விரித்த பல் கதிர்கொள் சூலும் வெடிபடு தமருகங்கை
தரித்ததோர் கோலகால பைரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக்கண்டு ஒண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே

என்று அப்பர் சுவாமிகள் போற்றிய வயிரவநாதர் இத்தலத்தில் சிறப்பாக விளங்குகிறார்.
“நஞ்சினை உண்டிருள் கண்டர் பண்டு அந்தகனைச் செற்ற
வெஞ்சின மூவிலைச் சூலத்தர் வீழி மிழலையார்
அஞ்சனக் கண்ணுமை பங்கினர் கங்கையங்காடிய
மஞ்சனக் செஞ்சடையார் என வல்வினை மாயுமே.

என்னும் சம்பந்தர் பாடல் வயிரவரைக் குறிப்பிடுவதாகக் கூறப்படுகிறது.
வயிரவர் சிவ மூர்த்தங்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். க்ஷேத்திரங்களைக் காக்கின்றமையால் க்ஷேத்திரபாலகர் எனவும் அழைக்கப்படுகிறார். நான்மறைகளே நாய் வடிவுடன் வயிரவருக்கு வாகனமாக விளங்குகின்றன. பிரம்மனின் அகந்தையை வயிரவர் அடக்கினார் என்பது கந்த புராணம்.
திருப்பத்தூரில் உள்ள பைரவர்கோயில் வைரவருக்குச் சிரசுஸ்தானமாகவும், வயிரவன்பட்டியில் உள்ள வயிரவர் கோயில் இதயஸ்தானமாகவும் இலுப்பைக்குடியிலுள்ள வைரவர்கோயில் பாதஸ்தானமாகவும் விளங்குகின்றன.
வயிரவன்பட்டியில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சஷ்டியன்று சம்பாசஷ்டி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று வயிரவமூர்த்தி அரக்கனை சம்ஹாரம் செய்கிறார். சம்ஹார சஷ்டி விழா என்பது தற்சமயம் சம்பாசஷ்டி விழா என்று அழைக்கப்படுகிறது.
சிற்பங்களின் சிறப்பு
வயிரவன் கோயிலில் காணப்படும் சிற்பங்கள் நகரத்தார்களின் தெய்வத் திருப்பணிகளின் மகுடமாகத் திகழ்கின்றன. இக்கோயிலின் கருங்கல் திருப்பணி கி.பி. 1864ம் ஆண்டில் நகரத்தார்களால் துவங்கப்பட்டு, கி.பி. 1894ம் ஆண்டு சிறந்த சிற்ப வேலைப்பாடுகளுடன் நிறைவேறியது. நாற்பது ஆண்டுகாலம் வயிரவன்பட்டியிலேயே தங்கி இருந்து, வயிரவன் கோயிலைச் சிறப்பாகக் கட்டி முடிப்பதற்கு உறுதுணையாக இருந்த பெருமை தெய்வநாயக வகுப்பைச் சேர்ந்த கண்டனூர் அ.நா. குடும்பத்தினரான திரு. நா.அ.ராம. இராமசாமி செட்டியார் அவர்களைச் சாரும்.
சண்டீசுவரர் எழுந்தருளியுள்ள தனிக்கோயில் ஒரே கல்லினால் ஆனது. சுமார் 20 டன் எடையுள்ள கல்லை குன்றக்குடி – தருப்பத்தூர் நெடுஞ்சாலைக்குத் தெற்கேயுள்ள மலையிலிருந்து ஒரே கல்லாக வெட்டி எடுத்து வந்து குடைந்து அதில் சண்டீசுவரரை எழுந்தருளச் செய்திருக்கிறார்கள். அந்தக்கல் எடுக்கப்பட்ட இடத்தில் ஏற்பட்ட பள்ளத்திற்குச் சண்டீஸ்வரர் மலைப்பள்ளம் என்று பெயர்.
சண்டீஸ்வரர் சந்நிதிக்குக் கீழ்புறம் வளரொளிநாதரின் திருமாளிகை வடக்குச் சுவரில் ராமபிரான் ஆஞ்சநேயருக்கு முன்பாகக் கைகூப்பி நிற்கும் கோலத்தில் காணப்படுகிறார். இது ஒரு அரிய அழகிய சிற்பம்.
நடராசர் சன்னிதியில் காணப்படும் இரண்டு குதிரை வீரர் சிற்பங்கள் அற்புதமானவை. குதிரை வீர்ர் சிற்பத்துக்கு வடக்கில் கண்ணப்பர் சிற்பம் கண்கொள்ளாக் காட்சியாகும்.
வயிரவர் சிற்பம் வனப்பு மிக்கதாகும். வயிரவர் பத்மபீடத்தில் நின்ற திருக்கோலத்தில் காணப்படுகிறார். அக்கினி கேசத் தலைக்கோலமும், ஆபரணங்கள் நிறைந்த மார்பும் காணப்படுகின்றன. நான்கு கரங்களில் உடுக்கை, பாம்பு, சூலம், கபாலம் ஆகியவற்றை ஏந்தியுள்ளார். வயிரவருக்குப் பின்புறம் அவரது வாகனமான நாய் நின்ற நிலையில் காணப்படுகிறது.
வயிரவன் கோயில் விமானங்களிலும், மண்டப விமானங்களிலும் மொத்தம் 1416 சுதைச் சிற்பங்கள் உள்ளன. இவை மிகுந்த கலை அழகு உடையவை.
வயிரவன் கோயிலில் உள்ள முதல் திருச்சுற்றில் வடகிழக்குக் கூரையில் வயிரவன் கோயில் தலபுராணத் தொடர்பான ஓவியங்கள் காணப்படுகின்றன. தென்கிழக்குக் கூரையில் இராமாயணக் காட்சிகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இவை மிகுந்த கலை நுணுக்கம் கொண்டவை.
வயிரவன் கோயிலின் சிற்பங்களைப் பற்றியும் ஓவியங்களைப் பற்றியும் விவரமாகத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் டாக்டர் வ. தேனப்பன் அவர்கள் மிக நுணுக்கமாக ஆராய்ச்சி செய்து வெளியிட்டிருக்கும் ‘ஒன்பது நகரக்கோயில்கள்’ என்ற நூலைப் படிக்க வேண்டுகிறேன் (தேவக்கோட்டை தேன்வள்ளியம்மை பதிப்பக வெளியீடு).
நகரவயிரவன்பட்டியின் தலச்சிறப்பை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக இச்சிறு நூலை வெளியிடுகிறேன். முன்னுரையில் வயிரவன் கோயிலைப் பற்றிய சிறப்பை நான் எழுதுவதற்குப் பெரிதும் எனக்குத் துணைபுரிந்தவை 1982ம் ஆண்டு நகர வயிரவன் கோயில் திருக்குட நன்னீராட்டு விழாச் சிறப்பு மலரில் வெளிவந்த டாக்டர் சுப. அண்ணாமலை அவர்களின் கட்டுரையும், ராயவரம் உயர்திரு. ப.வ. ராம. குழந்தையன் செட்டியார் அவர்களின் கட்டுரையும், டாக்டர் வ.தேனப்பன் அவர்கள் எழுதிய சிறந்த ஆராய்ச்சி நூலான ‘ஒன்பது நகரக் கோயில்கள்’ என்ற நூலும் ஆகும். மேற்கண்ட பெரியோர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது இந்தச் சிறிய நூல் வெளியீட்டுப் பணியில் என்னை ஊக்குவிக்குமாறு வயிரவ நாதரின் பக்தகோடிப் பெருமக்களையும், தமிழன்பர்களையும், பணிவுடன் வேண்டுகிறேன்.

யோக பைரவர்

கையில் திரிசூலம், நிமிர்ந்த நாசி, உருட்டிய விழிகளுடன் ஆஜானுபாகுவான தோற்றத்துடன் சம்மணம் கட்டி உட்கார்ந்திருக்கிறார் யோக பைரவர்.
இவருக்குப் பின்னால் ஆயிரம் வருஷத்தியக் கதை.
அதில் சின்னக் கிளைக் கதை.
கொலை, கொள்ளைகளில் கொடி கட்டிய பெயர் அவருக்கு. சாமர்த்தியமாக்க் கொள்ளையடிப்பதில் பிரசித்தி பெற்றவர், இங்கு வந்திருக்கிறார். பைரவசாமியைப் பார்த்திருக்கிறார். வணங்கியிருக்கிறார். கிணற்றில் கல் எறிந்த மாதிரி சலனம்.
மாறியிருக்கிறது மனம். அதன் இன்னொரு பக்கம் ஒளிந்திருந்த திறமையில் வெளிச்சம் பட்டுக் கவிதை பாடியிருக்கிறார். அப்படிக் கவிதையினால் அவர் காவியமே படைத்ததாகச் சொல்லப்படுகிறது. அப்படி அவர் எழுதியதாகச் சொல்லப்படும் காவியம் – ராமாயணம்.
அந்தக் கவிஞர் வால்மீகியாம்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பத்தூரில் இருக்கிற யோக பைரவருக்குப் பின்னணியில்தான் இந்தக் கதை. திருப்பத்தூரின் அந்தக் காலத்திய பெயர், வால்மீகிபுரம். பிறகு தமிழில் புத்தூராகி, முன்னால் ‘திரு’ என்கிற அடைமொழி சேர்ந்து திருப்பத்தூர்.
பெயரில் மட்டுமல்ல, பைரவரைப் பற்றிச் சொல்லப்படும் இன்னொரு கதையிலும் ‘ராமாயண வாசனை!’.
ராமர், சீதைக்குக் குழந்தை பிறந்தது இங்குதானாம். பெயிரிடுகிறார்கள் ‘லவன்’. அந்தச் சமயம் குழந்தையை அருகிலிருந்து கவனித்துக் கொண்டவர் வால்மீகி.
ஒரு சமயம், குடிநீர் எடுத்துவர வெளியே போகிறாள் சீதை. பக்கத்திலிருக்கிற முனிவரான வால்மீகியிடம் தொட்டிலில் கிடந்த குழந்தையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுப் போகிறாள். போனதும் சிறிது நேரத்தில் கண்மூடி இருந்த முனிவரின் நிஷ்டையைக் கலைக்காமல் குழந்தையை மெதுவாகத் தூக்கிக்கொண்டு வெளியே சென்று விடுகிறாள் சீதை. சிறிது நேரம் கழித்துக் கண் விழிக்கிறார் வால்மீகி. குழந்தையைக் காணவில்லை. வருந்துகிறார். தன் கையிலிருந்த தர்ப்பைப் புல்லைத் தொட்டிலில் போடுகிறார். உடனே அது குழந்தையாக உருவெடுக்கிறது. அச்சு அசலாக ‘லவன்’ போலவே இருக்கும் அந்தக் குழந்தை தொட்டிலில் கிடக்கும்போது சீதை உள்ளே நுழைகிறாள். அவளுக்கு அதிர்ச்சி. இன்னொரு லவனா? “இவனும் உன் குழந்தைதான்” என்கிறது அசரீரி. பிறகு இருவரையுமே வளர்க்கிறாள் சீதை.
புராண காலத்து ‘குளோனிங்…’
சீதையை நினைவுபடுத்துகிற வித்த்தில் இன்றும் திருப்பத்தூரிலுள்ள ஒரு குளத்தை சீதேவி – சீதளி என்று அழைக்கிறார்கள் இங்குள்ள மக்கள்.
காசியிலிருந்த பைரவரை முருகன் இங்கு அழைத்து வந்த்தாக ஒரு கதை. காசியிலிருந்து வரும்போது தன்னுடன் கொன்றை மரக்கன்றையும் கொண்டுவந்து இங்கு நட்டாராம். ‘காசி வில்வம்’ என்கிற பெயருடன் இப்போதும் இருக்கிறது கொன்றைமரம்.
பாதங்கள் இரண்டையும் ஒருசேரப் பிணைத்து பெருவிரல்களால் பூமியை ஊன்றிய கோலத்தில் அமர்ந்திருக்கிறார் பைரவர். காதுகளில் சுருளான தோடு, கண்களில் அக்னி… இருப்பது யோக நிலையில்.
“ஆபத்து என்றால் பைரவர் உதவுவார்” என்கிற நம்பிக்கை இருப்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இங்கு வந்து வணங்கி வழிபட்டால் பல சிக்கல்கள் விலகும் என்பதும் ஒரு நம்பிக்கை.
ஒரு சமயம் சனீஸ்வரனுக்கே ஒரு சிக்கல். யமதர்மன் அவரை அலட்சியப்படுத்த, நொந்து போகிறார். தனது தாய் சாயாதேவியிடம் தன்னுடைய மனப்புகைச்சலைச் சொல்லிக் குமுறுகிறார். தாய், “நேரே போய் பைரவரைப் பார்” என்கிறார். பைரவரை தரிசிக்கிறார் சனீஸ்வரன். உடனே அவரது கிரக நிலையிலேயே மாற்றம். பலரைப் படுத்தும் சனீஸ்வரனுக்கே குரு என்றால், மற்றவர்கள்?
“சிவ… சிவ” என்கிற வாசகத்துடன் சின்னக் கோபுரம். உள்ளே நுழைந்த்தும் ஒரு புறம் சிவன், இன்னொருபுறம் முருகன். இன்னும் சற்றுத் தள்ளிப் போனால் பைரவர்.
பைரவருக்கு முன்னால் ஆடு, கோழி வெட்டுவதற்கென்றே கல்லால் ஆன தனிப்பீடம். பைரவருக்குப் பின்னால் ஒரு குளம். அதன் கரையில் மொட்டையடிக்கிறார்கள். காது குத்துகிறார்கள். சற்றுத் தள்ளி ஆடு, கோழி வெட்டத் தனியிடம். பொங்கல் வைக்கத் தனியிடம்.
எதிரிகளால் உண்டாகும் தொல்லைகள், பில்லி, சூன்யம் நீங்க அதற்கென்றே விசேஷ அர்ச்சனை செய்கிறார்கள். ஒன்பது முறை பூஜை செய்து தயிர் அன்னப் பாவாடை சாத்தி, தேங்காய் பழத்துடன் கும்பிட்டால் வழக்கில் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இதே மாதிரி பைரவருக்கு முன்னால் சிறு மிளகை சின்னத் துணியில் கட்டி, அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி அர்ச்சனை செய்கிறார்கள். அப்படிச் செய்தால் இழந்த சொத்துக்களும், பொருட்களும் திரும்பவும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பழங்காலத் தெய்வமான பைரவருக்கு மன்னர்கள் பலர் திருப்பணி செய்திருக்கிறார்கள். மண்டபம் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். வீரபாண்டியன், மாறவர்மன், சுந்தர பாண்டியத் தேவர் என்று பைரவர் கோவிலைப் பராமரித்த மன்னர்களின் பட்டியல் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நீண்டிருக்கிறது.
திருஞானசம்பந்தரிலிருந்து, திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் வரை பலர் பைரவரைப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள். இப்போதும் இந்தக் கோவிலில் ‘பைரவாஷ்டமி’ என்று தனி பூஜை பகல் 12 மணிக்கு நடக்கிறது.
வாகனம் எதுவுமில்லாமல் தரை தொட்டபடி உட்கார்ந்திருக்கும் பைரவர் இன்றும் பல சமூகத்தைச் சேர்ந்தவர்களின் குலதெய்வம்.
இன்னொரு ஆச்சர்யம், மற்ற மத்த்தினரையும் ஈர்க்கக்கூடிய மையமாக பைரவர் இப்போதும் இருப்பது. முஸ்லிம்களும் வருகிறார்கள். வந்து வாசனை திரவியங்களைப் படைத்து வழிபடுகிறார்கள். கிறிஸ்தவர்களும் வந்து வழிபடுகிறார்கள்.
சமயம் கடந்து அவர்களை ஒன்றிணைக்கிறது பைரவர் மீது அவர்கள் வைத்திருக்கிற நம்பிக்கை