திங்கள், 26 செப்டம்பர், 2011

காக்கும் தெய்வம் கால பைரவர்


bairavar-swamy.jpg

ஆசிரியரைப் பற்றி…

ஸ்ரீவேம்புச்சித்தர் குணசேகர சுவாமிகள் காவல் துறையில் பணிபுரிபவர். பைரவ உபாசனை ஏற்று தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு இறையருளால் நன்மைகள் கிடைக்கச் செய்து நல்வழி காட்டி வருகிறார். மேலும் இவர் காக்கும் தெய்வம் ஸ்ரீமகாபைரவர். செட்டிநாட்டு சீமையில் பைரவரின் அற்புத திருத்தலங்கள், அழகன் திருமுருகன், கொல்லூர் அம்மா மூகாம்பா போன்ற நூல்களை எழுதியுள்ளார். மேலும் தேய்பிறை அஷ்டமியில் யாக வேள்வி நடத்தி பைரவர் பேரருளை எல்லாருக்கும் கிடைக்கச் செய்து வருகிறார்.

காக்கும் தெய்வம் கால பைரவர்

காவலுக்கு அதிபதி: சிவபெருமான் தட்சணாமூர்த்தி கல்விக்கும், நடராஜமூர்த்தி நடனத்திற்கும், லிங்க மூர்த்தி அருவ வழிபாட்டிற்கும், பைரவமூர்த்தி காவலுக்கும் அதிபதியாக மக்களால் தொன்றுதொட்டு வணங்கப்பட்டு வரப்படுகிறார்கள்.

பஞ்ச குமாரர்கள்: சிவபெருமானின் ஐந்து குமாரர்களாக கணபதி, முருகன், பைரவர், வீரபத்திரர், சாஸ்தா என்றும் சொல்லப்படுகிறது.

பைரவ ரூபம்: மேலே சொல்லப்பட்ட ஐவரில் ஸ்ரீமகா பைரவர் பொதுவாக எல்லா ஆலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையிலே நிர்வாணக் கோலத்தினராய், நீல மேனியராய், நாய் வாகனத்துடன், சிலம்பு பூட்டிய பாதங்களுடன், இடுப்பில் பாம்புகளை அணிந்து கொண்டும், சூலம், கபாலம், பாசம் டமருகம் இவைகளைக் கையில் தாங்கியும், மேல் நோக்கிய தீ ஜுவாலை கொண்ட
கேசத்தினராய், பிறைசந்திரன் அலங்கரிக்க இரு கோரைப் பற்களுடன் உக்ர ரூபத்துடன் திருக்காட்சி தருபவர்தான் பைரவப் பெருமான்.

பூஜைகள்: காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று ஸ்ரீ பரார்த்த நித்ய பூஜா விதி கூறுகிறது. அதேபோல் ஆலயத்தின் மற்ற திருச்சன்னதிகளை பூட்டிச் சாவியை பைரவர் பாதத்தில் வைத்து விட்டு அதன்பின் வெளிக் கதவை பூட்டிச் சாவியை எடுத்துச் செல்லும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

பைரவரின் சிறப்பு: சிவபிரானின் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றியவர். காசியம்பதியில் சிவகணங்களுக்கு தலைவராக விளங்குபவர். ஆணவம் கொண்ட பிரம்மனின் சிரம் கொய்தவர். மன்மதனின் கர்வம் அடங்கச் செய்தவர். முனிவரின் சாபத்திலிருந்து தேவேந்திரன் மகன் ஜெயந்தனைக் காத்தவர். சனியை சனிஸ்வரராக்கி நவக்கோள்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமைச் சேர்த்தவர் என்ற பெருமைமிகு சிறப்புக்களைக் கொண்டவர். இவரை கால பைரவர், மார்த்தாண்ட பைரவர், ஷேத்திரபாலகர், சத்ரு சம்ஹார பைரவர், வடுக பைரவர், சொர்ணாகாசன பைரவர் என்று பல பெயர்களில் அழைத்து வழிபடுகிறோம்.

உலக சிருஷ்டி: செளந்தர்ய லஹரியில் 41வது சுலேகத்தில் காலாக்னிருத்திரனால் மஹாபிரளயத்தில் சாம்பலாக்கப்பட்ட உலகத்தை மீண்டும் உண்டு பண்ணுகின்ற காரணத்திற்காக சித் சக்தியான அம்பிகையே ஆனந்த பைரவியாகவும், ஈசனே ஆனந்த பைரவராகவும் தாண்டவமாடிக் கொண்டிருப்பதால் ஒன்பது விதமான ரசகங்களும் வெளிவருகின்றன என்றும், உலக சிருஷ்டியே ஆனந்த பைரவரால்தான் நடப்பதாகவும் மஹா காலஸம்ஹிதை. காலீதந்திரம், விஞ்ஞானபைரவர் முதலிய சுலோகங்களில் சொல்லப்பட்டுள்ளது.

பெயர் காரணம்: பைரவர் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்னவென்றால் பயத்தைப் போக்குபவர் மற்றும் பயத்தை அளிப்பவர் என்பதாகும். நல்லவர்களின் பயத்தைப் போக்குபவர். அதேபோல் தீயவர்களுக்கு பயத்தை அளிப்பவர். அப்படிப்பட்ட ஸ்ரீமஹாபைரவரை வணங்க வாழ்வில் ஏற்றம் பெறலாம்.

பிரம்மனின் செருக்கு அழித்தல்: ஒரு காலத்தில் ஐந்து தலைகளுடன் விளங்கிய பிரம்மா தனக்கும் ஐந்து தலை, ஈசனுக்கும் ஐந்து தலை. ஆகவே தானே உயர்ந்தவன், தன்னைப் போற்ற வேண்டும், துதிக்க வேண்டும் என்று சித்த, ரிஷி, முனிவர்களை வற்புறுத்தத் தொடங்கவே அவர்கள் சிவனாரை தரிசித்து பிரம்மனின் ஆணவப் போக்கை எடுத்துக் கூற, பைரவப்பெருமானை அழைத்து, பிரம்மாவின் ஐந்தாவது
தலையைக் கிள்ளி ஆணவத்தைப் போக்கச் சொன்னார். அதேபோல் பைரவரும் செய்து பிரம்மாவின் ஐந்தாவது தலையை நீக்கி, அவரை நான்முகன் ஆக்கினார். பிரம்மாவை நான்முகன் ஆக்கிய சிவசொரூபமே ஸ்ரீபைரவர் என்று காசி காண்டம் சொல்கிறது.

அசுரர்களை அழிக்க பைரவர் தோன்றல்: அதேபோல் ஒரு சமயம் அந்தகாசுரன் என்னும் அரக்கனின் அட்டூழியங்களை ஒழிக்க தேவர்கள் சிவனாரை வேண்ட, ஈசன் தன் இதய அக்னியிலிருந்து பைரவரை உருவாக்க, அது விஸ்வரூபமெடுத்து ஒன்றாகி, ஒன்றிலிருந்து எட்டாகி, எட்டிலிருந்து அறுபத்து நான்காகி அசுரர்களை முழுவதுமாக அழித்து தேவர்களுக்கு அமைதியை வழங்கியதாகவும், இதனால் மகிழ்வடைந்து தேவர்கள் அறுபத்து நான்குயோகினிகளை அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. ஆனால் தற்சமயம் நம்முடைய வழிபாட்டில் எட்டு பைரவர்களை மட்டுமே வழிபடும் முறை இருந்து வருகிறது. ஆக அஷ்ட பைரவர்கள் மற்றும் அஷ்டபைரவ யோகினிகள் யார், யார் என்பதைக் காண்போம். அசிதாகபைரவர்-ஸ்ரீபிராம்ஹி, குருபைரவர் - ஸ்ரீமாகேஸ்வரி, சண்டபைரவர் - ஸ்ரீகெளமாரி, குரோதன பைரவர் - வைஷ்ணகி, உன்மத்த பைரவர் - வாராஸ்ரீ, கபால பைரவர் - இந்திராணி, பீஷண பைரவர் - சாமுண்டி, சம்ஹார பைரவர் - சண்டிகாதேவி ஆகியோர் ஆவர்.

ராசிகளின் ராஜா: பிருமூத்ஜாதகம் என்ற நூலில் பன்னிரண்டு ராசிகளும், பைரவருடைய உடலின் அங்கங்களாக இருப்பதாகவும் அவை மேஷம்-சிரசு, ரிஷபம்-வாய், மிதுனம்-இரு கைகள், கடகம்-மார்பு, சிம்மம்-வயிறு, கன்னி-இடை, துலாம்-புட்டங்கள், விருச்சிகம்-மர்ம ஸ்தானங்கள், தனுசு-தொடை, மகரம்-முழங்கால்கள், கும்பம்-காலின் கீழ்பகுதி, மீனம்-கால்களின் அடிபாகம் என் பன்னிரண்டு ராசிகளும் நிறைந்துள்ளன. மேலும் பைரவரின் சேவகர்களாக நவக்கோள்களும் இருப்பதால் தன்னை வணங்கக்கூடிய அன்பர் எந்த ராசியைச் சேர்ந்தவராயினும் நவக்கோள்களில் எந்தக் கோளின் தாக்கத்தால் பாதிப்பு வந்தாலும் கெடுதல்கள் அனைத்திலிருந்தும் விடுவிப்பார்.

சக்தி பீட காவலர்: தாட்சாயணி தேவி, தன் தந்தை தட்சன் செய்த யாகத்தில் தனது மருமகனான சிவனாருக்கு யாகத்தில் தரவேண்டிய அவிர் பாகத்தை தராது அவமதித்ததால், தட்சனின் மகளான பார்வதி தேவியாக குண்டத்தில் தனது உயிரைத் தியாகம் செய்தபோது, அதனால் உக்கிரநிலை அடைந்த சிவனார் தாட்சாயணியின் உடலைத் தாங்கி உலகமெலாம் சுற்றி அலைந்த போது திருமால் தன் சக்கரத்தால் தேவியின் உடலை பல கூறுகளாக்கி இப்பூலோகத்தில் பல இடங்களில் விழச்செய்தார் என்றும், தேவியின் உடலுறுப்புகள் விழுந்த ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு சக்தி பீடங்களாயின என்றும், அவ்வாறு ஏற்பட்ட சக்தி பீடங்களுக்குப் பாதுகாவலராக பைரவ வேடம் தாங்கி சிவப்பிரானே காவல் காத்து வருவதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

சனீஸ்வரருக்கு அருளுதல்: சூரிய பகவானின் புத்திரர்களாகிய எமதருமரும் சனியும் சகோதரர்களாவார்கள். இதிலே எமதருமர் நல்ல அழகுடனும், ஆரோக்கியத்துடனும் திகழ்ந்து, சனி ஊனமான காலுடன் சற்று அழகு குறைந்தும் காணப்பட்டதால் தனது சகோதரனால் அலட்சியப்படுத்தப்பட்டு வந்தார். இதனால் மனம் வருந்திய சனி, தனது தாயான சாயாதேவியிடம் மன வருத்தத்தை எடுத்துக்கூற, ‘நீ இன்று முதல் பைரவரை உள்ளன்போடு வழிபட்டு வா, அவர் உனக்கு நல்ல நிலையைத் தருவார். உனது மனத்துயரம் யாவும் தீர்ந்து போகும்’ என்று தாயார் கூறிய அறிவுரையை ஏற்று சனியும் பைரவப்பெருமானை வழிபாடு செய்து வரலானார். சனியின் உண்மை அன்பால், கள்ளமில்லா வழிபாட்டால் மனம் மகிழ்ந்த பைரவர் சனியின் உண்மை, அன்பை மக்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக ஈஸ்வரப் பட்டம் அளித்து சனீஸ்வரராக நவக்கோள்களில் சக்தி மிகுந்த கோளாக உயர்த்தி பெருமைப்படுத்தினார். ஆகவே பைரவமூர்த்தியை வழிபட ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, ஜன்மச்சனி, அர்த்தாஷ்டமச்சனி போன்ற சனி தோஷங்கள் பனி போல் விலகி ஓடும்.

அஷ்டமிப் பெருமை: சித்திரை மாத நவமி ராமருக்கும், ஆவனி மாத அஷ்டமி கிருஷ்ணருக்கும், மார்கழி மாத மூலம் ஆஞ்சநேயருக்கும், மாசி மாத அமாவாசை சிவனாருக்கும் அவதாரத் திருநாளாகக் கொண்டாடப்படுவது போல் கார்த்திகை மாத அஷ்டமி பைரவாஷ்டமி என்று மிகச் சிறப்பாக எல்லா சிவத்திருவாலயங்களிலும் அவரது திருவவதாரத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

பைரவப்பெருமானை வழிபட ஒவ்வொரு மாத அஷ்டமியும் மிகச் சிறந்த நாளே. ஏனெனில் அன்றைய நாளில் அஷ்டலட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாகவும் அதனால் அன்று அவரை வணங்கிட மக்கள் அனைத்து வளங்களையும் பெற்று சிறக்க வாழலாம். மேலும் ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமிக்கும் ஒவ்வொரு சிறப்புப் பெயர் உண்டு. மார்கழி - சங்கராஷ்டமி, தை - தேவதேவாஷ்டமி, மாசி -
மகேஸ்வராஷ்டமி, பங்குனி - திரியம்பகாஷ்டமி, சித்திரை - ஸ்நாதனாஷ்டமி, வைகாசி - சதாசிவாஷ்டமி, ஆனி - பகவதாஷ்டமி, ஆடி - நீலகண்டாஷ்டமி, ஆவணி - ஸ்தானுஅஷ்டமி, புரட்டாசி - சம்புகாஷ்டமி, ஐப்பசி - ஈசானசிவாஷ்டமி, கார்த்திகை - காலபைரவாஷ்டமி.

மேலும் காலபைரவாஷ்டமி எமவாதனை நீக்கும் மஹாதேவாஷ்டமி ஆகும். பைரவருக்கு அர்த்தசாம பூஜை மிக விசேஷமானதாகும்.

அஷ்டசித்தி அருளுபவர்: மேலும் பைரவரை வழிபடுபவர்களை அஷ்டசித்திகளும் வந்தடையும். அணிமா - அணுபோல் ஆதல், மகிமா - மிகப்பெரிய உருவம் பெறல், கரிமா - மிகவும் கணமாதல், லகிமா - காற்றைப் போல் லேசாதல், பிராப்தி - விரும்பியதைப் பெறல், பிரகாம்யம் - நினைத்தவுடன் நினைத்ததைப் பெறுதல், ஈசித்துவம் - எல்லாவற்றுக்கும் மேலான தன்மை, வசித்துவம் - வசீகரத்தன்மை முதலியவை எளிதில் கிட்டும்.

சந்தன காப்பு அபிஷேகம்: பைரவ மூர்த்திக்குப் பிடித்தமானது சந்தன காப்பு. இதில் வாசனை திரவியங்களான புணுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் சேர்த்து சந்தனக் காப்பு செய்து வழிபடுவது என்பது தேவர்களின் வருடக் கணக்கில் ஒரு கோடி வருடம் பைரவ லோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் என்று சிவபுராணம் கூறுகிறது. பால், தேன், பன்னீர், பழரச அபிஷேகமும் மிக விசேஷம்.

பிடித்த மாலைகள்: பைரவருக்கு தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை அணிவித்து மல்லிகைப்பூ தவிர்த்து செவ்வரளி, மஞ்சள் செவந்தி மற்றும் வாசனை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது உத்தமம்.

பிடித்த உணவுப்பொருட்கள்: பைரவப்பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், தேன், செவ்வாழை, வெல்லப் பாயசம், பானகம், அவல் பாயசம், நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால் மற்றும் பல்வேறு பழ வகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.

சட்டை நாதர்: மஹா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்மர் இரண்ய கசிபுவின் சம்ஹாரத்திற்குப் பிறகு அவரது உக்கிரத் தன்மையைத் தணிக்க சரபேஸ்வரராக ஸ்ரீமஹா பைரவர் அவதாரம் எடுத்ததாக சீகாழிப் புராணம் கூறுவதுடன் அவ்வவதாரத்தினை சட்டநாதர் என்றும் அழைக்கிறது.

காலச்சக்ரதாரி: காலச்சக்கரத்தின் அதிபதியான பைரவ பெருமானுக்குள் பஞ்ச பூதங்கள், நவக்கோள்கள், ராசிகள், நட்சத்திரங்கள், பத்துத் திசைகள் என சர்வமும் அடங்கி இருப்பதால் அவரை வணங்கி வர அனைத்து நன்மைகளும் நிறையும். நல்ல கல்வி அறிவும், செல்வ வளமும் பெருகும். ஏவல், பில்லி, சூனியங்களில் இருந்தும், சர்வ பாப, தோசங்களிலிருந்தும் விடுதலையும், திருமண, மாங்கல்ய பாக்கியம், சந்தான பாக்கியம், நல் வேலை வாய்ப்பு என மக்களின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றித் தருவார். உண்மை அன்பும் நல் தூய்மையும், நன்னம்பிக்கையும் இவருடைய வழிப்பாட்டில் மிக மிக அவசியமான ஒன்றாகும்.

பைரவ வழிபாடு: பைரவப் பெருமானை காலையில் வழிபட சர்வ நோய்களும் நீங்கும். பகலில் வழிபட விரும்பியது யாவும் கிட்டும். மாலையில் வழிபட இதுவரை செய்த பாவம் யாவும் விலகும். இரவு அதாவது அர்த்த சாமத்தில் வழிபட வாழ்வில் எல்லா வளமும் பெருகி மன ஒருமைப்பாடும் கிடைத்து முக்தி நிலை என்ற இறைப்பரம்பொருளான பைரவப்பெருமானை அடையும் சாகாக் கல்வியும்,
மரணமில்லாப் பெருவாழ்வும் கிட்டும்.

பைரவ தீபம்: பைரவப்பெருமானுக்கு சிறுதுணியில் மிளகை சிறு மூட்டையாக கட்டி நல்லெண்ணெய் அகல் தீபத்தை ஏற்றி வழிபட எல்லா வளமும் பெருகும். தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம். அதேபோல் பூசணிக்காயை மத்தியில் இரண்டாகப் பிளந்து அதனுள் எண்ணெய் அல்லது நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம்.

பைரவ காயத்ரி:

சுவாநத்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய
தீமஹி தன்னோ பைரவ ப்ரசோதயாத்

பைரவ மூல மந்திரம்:

ஏக சஷ்டி அட்சரம் மந்திரம் லகுசித்திப்ரதாயகம்
ஏக சஷ்டி சதம் குர்யாத் ஜபம் மந்த்ரஸ்ய சித்தயே

மேற்கண்ட மந்திரங்களை ஜெபித்து வழிபாடு செய்து வாழ்வில் எல்லா வளமும் பெற்று பெரு வாழ்வு வாழ இறையருளும் குருவருளும் இனிதே வழி நடத்தட்டும்.

கிரக தோஷம் போக்கும் ஆதிபைரவர்


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சிவகாமசுந்தரி சமேத திருத்தளிநாதர் கோவிலில் தனிச் சன்னதியில் எழுந்தருளி கம்பீரத்துடன் அமர்ந்து அருள் பாலிக்கும் ஸ்ரீயோக பைரவர்தான் ஆதிபைரவர்.
இவரிடம் இருந்துதான் முதலில் அசிதாங்க பைரவர், உருபைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் எனும் அஷ்ட பைரவர்கள் தோன்றினர்.
பின்னர் இந்த எட்டு பைரவர் திருமேனி ஒவ்வொன்றிலிருந்தும் எட்டு எட்டாக ஒவ்வொரு காரணத்திற்கேற்ப 64 திருக் கோலங்களில் பைரவர்கள் வாகனத்துடனும், வாகனம் இல்லாமலும் நம் நாட்டில் உள்ள எல்லாக் கோவில்களிலும் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்கள். ஆக, நம் நாட்டில் உள்ள எல்லா ஆலயங்களிலும் எழுந்தருளி அருள்பாலிக்கும் எல்லா பைரவ மூர்த்திகளுக்கும், இத்தலத்தில் எழுந்தருளிக்கும் ஸ்ரீயோக பைரவர்தான் மூலமூர்த்தி ஆவார்.
பைரவரை ஜோதிட நூல்கள் காலமே உருவாய் கொண்ட காலபுருஷனாக கூறுகின்றன. பன்னிரெண்டு ராசிகளும் அவரது உருவின் பகுதிகளாகின்றன.
மேஷம்-சிரசு, ரிஷபம்-வாய், மிதுனம்-இரு கரங்கள், கடகம்-மார்பு, சிம்மம்-வயிறு, கன்னி-இடை, விருச்சிகம்-லிங்கம், தனுசு-தொடைகள், மகரம்-முழந்தாள், கும்பம்-கால்களின் கீழ்பகுதி, மீனம்-அடித்தளங்கள்.
பிரபஞ்சத்தில் சகல ஜீவ ராசிகளும் வான மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களும், சூரியன், சந்திரன் சனி, ராகு - கேது ஆகிய நவக்கிரகங்களும் காலச்சக்கரத்தின் ஆளுகைக்கு உட்பட்டதே! காலச் சக்கரத்தினை இயக்கும் பரம்பொருள் பைரவரே!
கிரகங்கள் எல்லாம் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. ஆனால், அந்த கிரகங்களை எல்லாம் ஸ்ரீயோக பைரவர் ஆட்டிப் படைத்து ஆட்சி செய்கிறார். பைரவர் அரசர் என்றால், அவர் இட்ட கட்டளைகளை நிறைவேற்றும் சேவகர்களே கிரகங்கள். பைரவரின் கட்டளைப்படியே காலச்சக்கரம் சுழல்கிறது. அவர் கட்டளைப்படியே எல்லா கிரகங்களும் செயல்படுகின்றன. அவரைச் சரணடைந்து நெஞ்சம் உருக வழிபட்டால் காலத்தின் கட்டுப்பாட்டையும் மீறி கிரக தோஷங்களை அகற்றி நன்மை புரிவார்.
ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியின்போதும் எல்லா ராசிகளுக்கும், குறிப்பாக பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் ஸ்ரீபைரவரைச் சரணடைந்து வழிபட அவரின் கடைக்கண் பார்வை பட்டு வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்!

செல்வம் தரும் சொர்ண பைரவர்

சுவர்ணம் என்றால் தங்கம் என்று பொருள். தன்னுடைய பெயரிலேயே சுவர்ணத்தைக் கொண்ட இவர் அளவற்ற கீர்த்தியையும் தனத்தையும் அள்ளி அள்ளி தருபவர். நினைத்ததையெல்லாம் தரும் கற்பக மரத்தடியில் அழகிய சிம்மாசனத்தில் சிவசக்தி வடிவில் சுந்தரரூபனாக மடியில் சுவர்ணாதேவி அமர்ந்த நிலையில் காட்சித் தருபவர் சுவர்ணாகர்சன பைரவர் ஆவார்.

“சுவர்ணாகர்சன” என்றால் “எளிதில் கவரக்கூடிய” என்று அர்த்தம். சுவர்ணாகர்சன பைரவர் என்றால் பொன்னை இழுத்துத் தருபவர், அதாவது தன்னை பயபக்தியுடன் உண்மை அன்பு கொண்டு வேண்டுபவர்களிடம் பொற்குவியலை கவர்ந்து இழுத்து தானாக சேரும்படி செய்பவர் என்று பொருளாகும்.
பண்டைக் காலங்களில் அரசர்கள் தங்கள் பொக்கிஷ சாலைகளில் பைரவப் பெருமானை நிறுவி அவருக்குச் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டு வ்நதமையினால் அவர்களது நிதிச் சாலைகளில் பொன் குவிந்து கொண்டே இருந்ததுடன் அவர்களை எவராலும் எளிதில் வெல்ல இயலாத அளவு சக்தியைப் பெற்றிருந்தனர். இதுதான் உண்மை. பைரவர் திகம்பரராய்த் திகழ்ந்த போதிலும் உண்மையான அன்பர்களுக்கு பொன்னையும் பொருளையும் வாரி வாரி வழங்குபவர்.
“ஸ்ரீதத்துவநிதி” என்னும் நூலில் சொர்ணாகர்சன பைரவர் பொன்னிறம் கொண்டவர். மஞ்சள் நிறப் பட்டாடைகளை அணிந்தவர். மூன்று கண்களும் நான்கு கரங்களும் கொண்டவர். நவரத்தின மணிகள் இழைத்த பொன்னாலான அட்சயப் பாத்திரம் ஏந்தியவர். சூலம், சாமரம், ஈட்டி ஆகியவற்றைத் தரித்தவர். அனைத்து தேவாதி தேவர்களாலும் போற்றப்படக்கூடியவர். எல்லையில்லா ஆனந்தத்திலிருப்பவர். சகல சித்திகளையும் அருள்பவர் என்றும்,
“ஸ்ரீ மஹாலட்சுமி மந்திரகோசம்” என்ற நூலில் சுவர்ணாகர்சன பைரவமூர்த்திக்கான மந்திரம், யந்திரம் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. மேலும் சுவர்ணாகர்சன பைரவர் மடியில் அமர்ந்திருக்கும் பொன் நிறமாகப் பிரகாசிக்கும் தேவியை ஸ்வர்ணா என்றும சுவர்ணபைரவி என்று அழைத்தும் சகல அணிமணிகள் பூண்ட இவள் பொன் கொட்டும் சூடம், தாமரை, அபய முத்திரை தரித்தவளாகவும் பைரவரைத் தழுவிக் கொண்டு இடது பாகத்தில் வீற்றிருப்பவளாகவும் அடியார்களுக்கு செல்வம் அனைத்தும் தருபவளாகவும் விளக்கப்பட்டுள்ளது.
ஆகம சாஸ்திர நூல்களில் சுவர்ணாகர்சன பைரவர் பற்றிக் குறிப்பிடும் போது மஞ்சள் பட்டு உடுத்தி, விலையுயர்ந்த அணிமணிகளை அணிந்து, நவரத்ன கிரீடம் சூடி, செந்நிற மேனியராய், அன்றலர்ந்த தாமரை போல் புன்னகை பூக்கும் திருமுகத்துடன், பொன்னிற முடியில் சந்திரனைச் சூடி, சுந்தரரூபனாக கரங்களில் தாமரை, பொன்மணிகள் பதித்த கங்கம், அமுதக்கும்பம், அபய, வரத முத்திரைகளுடன் பொன் பொழியும் குடந்தனை கரத்தில தாங்கி மறுகரத்தால் தம்மைத் தழுவும் ஆதிசக்தியான சர்வ சக்தி வாய்ந்த புன்முறுவர் பூத்த முகத்தினனாய் பொற்குடம் வைத்திருக்கும் சுவர்ணதா என்னும் அஜாமிளா தேவியை ஒரு புறத்துத் துழுவியவர் என்று விளிக்கிறது. சிவசக்தி வடிவில் உள்ள ஸ்ரீ சொர்ணாகர்சன பைரவரை உள்ளன்போடு வணங்கி வர சகல செளபாக்கியங்களும் தானாய் இல்லம் வந்து சேரும் என்று ஸ்ரீதேவி மாாத்மியம் கூறுகிறது.

பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்



எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் பைரவர் என்று அழைக்கப்படுகிறார். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது. படைத்தல், காத்தல்,அழித்தல் - அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். இந்தக் கடவுளே ஆனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவராக உலகை காக்கின்றார். அதன்பின்னர் காலாக்கினி பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார். இவருக்குத் தகுந்த பூசைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைந்து நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை. எந்தவிதமான பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார்.

பைரவர் வழிபாடு ஏன்?
பைரவர் வழிபாடு கைமேற் பலன்
இது தமிழகத்தில் வழங்கி வரும் பைரவர் வழிபாடு குறித்த ஆன்மீக மொழியாகும். துன்பங்களும், துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகிப் போனால் வாழ்க்கை என்பதை வாழப் பிடிக்காமல் அதனைத் தீர்த்துவிடத்தான் மனம் ஏங்கும். அப்படி சோகத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் அமுத மொழியாக பைரவர் வழிபாடு கூறப்படுகிறது. கடவுள் வழிபாடு செய்துவிட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார். அதனால் தான் பைரவர் வழிபாட்டின் பலனைக் குறிக்க இந்தப் பழமொழி வழங்கப்பட்டது. நவக்கிரகங்களின் வக்கிரத்தால் பலர் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தை அடைகிறார்கள். அதுவே அவர்களின் நல்ல பார்வையால் சிலர் எதிர்பாராத நன்மைகளையும், புகழையும் அடைகிறார்கள். நன்மைகள் கிடைத்தால் சரி,ஆனால், வரும் துன்பங்களிலிருந்து மீள என்ன வழி என்று கேட்டால் பைரவர் பூசை செய்யுங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பைரவர் பூசை செய்வதனால் கடுமையான தோஷங்களும் நீங்கும் என்று பைரவர் வழிபாட்டில் பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. நமது ஜாதகத்தை தகுந்த சோதிடர்களிடத்தில் காண்பித்து நிலவும் கிரக நிலைகளை ஆராய்ந்து, எந்தக் கிரகத்தால் தோஷம் உள்ளதோ, அல்லது எந்தக் கிரகம் பலவீனமாக உள்ளதோ, அது பலமடைய எந்தக் கிரக திசாபுத்தி நடப்பில் உள்ளதோ அதற்குரிய பைரவரை வழிபட்டு நலம் பெறுதல் வேண்டும். நவக்கிரகங்களின் தொல்லைகளிலிருந்து மீள ஒன்பது விதமான பைரவ வழிபாடுகள் பரிகாரங்களாக சோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளன.நீங்கள் நல்ல பயனை அடைய, கிரகங்களின் பிராணனாக உள்ள பைரவரின் காயத்ரீயையும், அந்த பைரவரின் உபசக்தியின் காயத்ரீயையும் சேர்த்து துதித்து வந்தால் உங்கள் துன்பங்கள் யாவும் ஓடி ஒளியும். இன்பங்கள் எல்லாம் தேடி வரும்.

நவக்கிரக பைரவர்களும் உபசக்திகளும்
நவக்கிரகங்கள் -பிராண பைரவர் - பைரவரின் உபசக்தி


1. சூரியன்-சுவர்ணாகர்ஷணபைரவர்- பைரவி
2.
சந்திரன் - கபால பைரவர்- இந்திராணி
3.
செவ்வாய்- சண்ட பைரவர்- கௌமாரி
4.
புதன்- உன்மத்த பைரவர்- வராஹி
5.
குரு - அசிதாங்க பைரவர் - பிராமஹி
6.
சுக்கிரன்- ருரு பைரவர் - மகேஸ்வரி
7.
சனி - குரோதன பைரவர்- வைஷ்ணவி
8.
ராகு - சம்ஹார பைரவர் - சண்டிகை
9.
கேது - பீஷண பைரவர்- சாமுண்டி


பைரவரின் சிறப்பு வடிவங்கள்: பைரவர் நீலநிற மேனியராய் சிலம்பொலிக்கும் திருவடிகளை உடையவராய், பாம்புகள் பொருந்திய திருஅரையும், தலை மாலைகள் புரளும் திருமார்பும், சூலம், மழு,பாசம், உடுக்கை இவைகள் ஏந்திய திருக்கரங்களையும் சிவபெருமான் போன்றே மூன்று கண்களையும், இரண்டு கோரைப்பற்களை உடையவராய், செஞ்சடை உடையவராய், கோபச் சிரிப்பும், உக்கிர வடிவமும் உடையவராய் காட்சியளிப்பார் என்று பைரவரின் தோற்றத்தை புராணங்கள் கூறுகின்றன. உடற்பற்றை நீக்கியபடியால் பைரவர் நிர்வாண கோலத்துடன் காட்சியளிக்கின்றார். பைரவர் காவல் தெய்வமாகையால் காவல் குறியீடான நாயை வாகனமாகக் கொண்டுள்ளார். இந்த நாயாவது பைரவருக்குப் பின்புறம் குறுக்காகவும், அவருக்கு இடப்புறம் நேராகவும் நிற்கின்றது. நகரத்தார் கோயில்களில் காணப்படும் பைரவர் வடிவத்தில் பெரும்பாலும் இரு நாய் வாகனங்களே காணப்படுகின்றன. அஷ்ட பைரவ வடிவங்களில் இந்த நாய் வாகனம் வேறு வாகனங்களாகக் காட்சியளிக்கிறது.

பைரவர் - பைரவரின் சக்தி - வாகனம்
1. அசிதாங்க பைரவர் - பிராமி - அன்னம்
2.
ருரு பைரவர் - மகேஸ்வரி - ரிஷபம்
3.
சண்ட பைரவர் - கௌமாரி - மயில்
4.
குரோதன பைரவர் - வைஷ்ணவி - கருடன்
5.
உன்மத்த பைரவர் - வராகி - குதிரை
6.
கபால பைரவர் - இந்திராணி - யானை
7.
பீஷண பைரவர் - சாமுண்டி - சிம்மம் (மனித பிரேதமும் உண்டு)
8.
சம்ஹார பைரவர் - சண்டிகை (இலக்குமியுடன் சேர்த்து சப்த மாதர்கள்) - நாய்
இவ்வாறு விதவிதமான வாகனங்களில் காணப்படும் பைரவர் ஒரு சில ஆலயங்களில் எவ்வித வாகனமும் இன்றி தனியராய் காட்சியளிக்கிறார். குறிப்பாக திருவான்மியூர், பேரூர், வேதாரண்யம்,திருவிற்கோலம் ஆகிய தலங்களில் உள்ள பைரவ வடிவங்களில் நாய் வாகனம் காணப்படவில்லை. எண்ணிலாக் கரங்களும், எண்ணிலாத் தலைகளும், எண்ணிலா கால்களும் கொண்ட காட்சிக்கு மிக மிக அரிதான வஜ்ர பைரவரின் திருவடிவம் ஒன்று புதுச்சேரி பிரஞ்சிந்திய பண்பாட்டுக் கழகத்தில் காணப்படுகிறது. மூன்று கால்களைக் கொண்ட அபூர்வ பைரவர் சிருங்கேரியில் காணப்படுகிறார். சூரக்குடியில் பைரவர் கதாயுதத்துடனும், திருவாரூரில் பைரவர் கையில் கட்டுவாங்கத்தையும் ஏந்தி அபூர்வ பைரவராகக் காட்சியளிக்கிறார். திருப்பத்தூருக்கு அருகில் பெரிச்சி கோயிலில் உள்ள பைரவத் திருவடிவம் எட்டுத் திருக்கரங்கள் கொண்டதாய் ஒரு கரத்தில் அறுபட்ட நிலையில் தலையொன்றை முடிக்கற்றையுடன் பிடித்தவண்ணம் காணப்படுகிறது. இன்னொரு வகையில் பிணத்தைக் குத்தி ஏந்திய நிலையில் கங்களாத்தண்டு உள்ளது. இவரருகே உள்ள நாய் இரண்டாம் இடக்கையில் தொங்கும் தலையின் தசைப்பகுதியை சவைத்துக் கொண்டிருக்கிறது.

http://bairavarvazhibaadu.blogspot.com/
நன்றி:

காக்கும் தெய்வம் கால பைரவர்



காவலுக்கு அதிபதி: சிவபெருமான் தட்சணாமூர்த்தி கல்விக்கும், நடராஜமூர்த்தி நடனத்திற்கும், லிங்க மூர்த்தி அருவ வழிபாட்டிற்கும், பைரவமூர்த்தி காவலுக்கும் அதிபதியாக மக்களால் தொன்றுதொட்டு வணங்கப்பட்டு வரப்படுகிறார்கள்.
பஞ்ச குமாரர்கள்: சிவபெருமானின் ஐந்து குமாரர்களாக கணபதி, முருகன், பைரவர், வீரபத்திரர், சாஸ்தா என்றும் சொல்லப்படுகிறது.

பைரவர் வழிபாடும் அதன் சிறப்புகளும்...



கும்பகோணம் - திருவாரூர் பாதையில் உள்ள திருச்சேறைத் தலத்திலுள்ள சாரபரமேஸ்வரர் ஆலயத்தில் கால பைரவர் அற்புதமாகக் காட்சியளிக்கிறார். அவரை வழிபட்ட திருநாவுக்கரசர், பைரவரைப் போற்றிப் பாடிய ஒரே ஒரு தேவாரப்பதிகம் இது.
விரித்த பல்கதிர்கொள் சூலம்
வெடிபடு தமருகம்கை
தரித்ததோர் கோலகால பயிரவனாகி
வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு
ஒண்திருமேனி வாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வனாரே
பைரவர் வழிபாடும் அதன் சிறப்புகளும்: படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் ஆற்றும் இந்த பைரவரின் வழிபாடு வடக்கேயிருந்து வந்த கபாலிக வழிபாட்டின் ஒரு பகுதியாகும். அனைத்து சிவாலயங்களில் பரிவார தெய்வ வழிபாடாக வழிபடப்படும் இந்த பைரவ வழிபாடு இல்லங்களில் திரிசூல வழிபாடாகவும் போற்றப்படுகிறது. வீடுகளில் காவல் தெய்வமான பைரவர் வடிவங்களை சிலைகளாகவோ படமாகவோ வைத்து வழிபடுவதற்குப் பதில் வீட்டின் சுவரில் திரிசூலத்தை வரைந்து அதனருகில் திருவிளக்கேற்றி வழிபடுகின்றனர். அனைத்து சிவாலயங்களிலும் வழிபாடு சூரியனிடமிருந்து ஆரம்பித்து அர்த்தசாமப் பூசையாக பைரவருடன் முடிவடைகிறது. இரவு அர்த்தசாமப் பூசை முடிந்ததும் பைரவருக்கான சிறப்பு வழிபாடுகள் செய்து ஆலயத்தின் கதவுகளை மூடி ஆலய சாவிக்கொத்தை அவரின் காலடியில் வைப்பது வழக்கம். பாதுகாப்பற்ற இந்நாளில் இப்படி சாவிகளை வைப்பதைத் தவிர்த்து பூசை முடிந்ததன் அடையாளமாக கைமணியையும் அபிஷேக கலசம் அல்லது கைச்செம்பையும் வைக்கின்றனர். ஆலயங்களில் நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவத்திற்கு முன்னும் பின்னும் பைரவருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. விசேஷ தினங்களில் இவருக்கு நெய்யபிஷேகம் சிறப்பாகச் செய்யப்படுகிறது. அந்த விசேஷ தின பூசையில் எட்டுவித பட்சணங்களும், எட்டுவித அன்னங்களும், நைவேத்தியப் பொருட்களாக நிவேதிக்கப்படுகின்றன. இன்னும் எட்டுவித மலர்களால் அர்ச்சனை செய்து எட்டுவித ஆரத்திகளும் செய்யப்படுகின்றன.
வழிபாட்டிற்கு உகந்த நேரம்: பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். இந்த அகால நேரத்தில் பராசக்தியானவள் பைரவி என்னும் பெயரில் நடமாடுகின்றாராம். அவளுடன் இறைவனும் பைரவராக தலத்தை வலம் வருவாராம். அதனால் சித்தர்கள் அந்த நள்ளிரவு நேரத்தில் திரிபுர பைரவியையும் பைரவரையும் தியானிக்கின்றார்களாம்

அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில்


சிவன் பூஜித்த கோவில்
ஆதியிலேயே இறைவன் இறைவி பராசக்தியானவளை மதுரையிலே மலையத்வஜ பாண்டியன் மகளாக அக்கினி குண்டத்திலே அவதரிக்கச் செய்தார்.
`தேவி மும்முலை தடாதகை' என்கிற பெயருடன்
ஆய கலைகள் 64 நான்கினையும் தேர்ச்சியுடன் கற்று
திக்விஜயம் செய்து இறுதியாக கைலாய மலையில் நந்தி மற்றும் பூத கணங்களை வென்று
இறைவனை பாத்திரமாத்திரத்திலேயே அகந்தை அழிந்து
தன் கணவர் இவரே என்று உணர்ந்து
மதுரையிலே திருமணக்கோலம் பூண்டு வர வேண்டுகிறாள்.
இறைவன் சோமசுந்தர பாண்டியர் என்கிற பெயருடன்
மதுரையிலே மாப்பிள்ளை கோலம்பூண்டு
எல்லாம் வல்ல சக்தி அம்பிகை மீனாட்சியை திருமணம் செய்து கொள்கிறார்.
திருமண கோலத்திலேயே தன் ஆன்மாவினை நடுவூர் என்கிற மதுரையம்பதிலேயே ஆலயம் அமைத்து சிவபூஜை செய்கிறார்.
அவர் ஆத்மார்த்த பூஜை செய்த சிவ ஆலயமே மதுரை
`இம்மையிலும் நன்மை தருவார்' ஆலயம் ஆகும்.
மேலும் இந்த ஆலயத்தில் ஸ்ரீ கால பைரவர் எழுந்தருளி உள்ளார்.
சிவனின் அம்சமாகிய பைரவரின் வடுகர் என்றும் சட்டநாதர் என்றும் ஆபதூதாரணர் என்றும் அழைக்கின்றார்கள்.




ஸ்ரீ கால பைரவர்;
சகல பிணிகளுக்கும் மனபயம், புத்தி தடுமாற்றம், ஊழ்வினை துன்பம்,
கடன் தொல்லைகள், தாமதமான செயல்பாடுகளுக்கும் விமோசனம் அளிக்கும் கண்கண்ட தெய்வம்.
இவரே கதி என சரணடையும் எல்லா பக்தர்களையும் இவர் நீடுழி வாழ வைத்துள்ளார்.
காலபைரவருக்கு இந்த கோவிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலும்
மற்றும் தேய்பிறை அஷ்டமி அன்றும் விசேஷ பூஜை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தட்சிணாமூர்த்தி :


இந்த கோவிலில் சிவனின் அம்சமாகிய தட்சிணாமூர்த்திக்கு வியாழன்தோறும் விசேஷ வழிபாடுகள், கூட்டு பிரார்த்தனைகள் சிறப்பாக நடந்து வருகிறது.
இந்த கோவிலில் செய்ய கூடிய சிவ வழிபாட்டில் அனைவரும் குருவினுடைய மந்திரங்களை சிவாச்சாரியார் சொல்ல,
அதை அவ்வாறே பக்தர்களும் திருப்பி சொல்லி வழிபாடு செய்வது விசேஷ அம்சமாகும்.
சகல பிணிகளையும் நீக்க வல்ல ஜ்வரஹர மகாலிங்கம் இங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அபிஷேகம் :


இவருக்கு பிரதி வாரம் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 6.30 மணிக்குள்
பால், இளநீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்து,
அர்ச்சனை செய்யும் போது மிளகு கொண்டு சென்று அர்ச்சனை செய்தால் தேகஆரோக்கியம் பெற்றிடலாம்.
சகல பிணிகளுக்கும் இங்கு பூஜை செய்து தரக்கூடிய மிளகு மிக விசேஷமான ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.