திங்கள், 21 மார்ச், 2011

யோக பைரவர்

யோக பைரவர்


natpu

கையில் திரிசூலம், நிமிர்ந்த நாசி, உருட்டிய விழிகளுடன் ஆஜானுபாகுவான தோற்றத்துடன் சம்மணம் கட்டி உட்கார்ந்திருக்கிறார் யோக பைரவர்.
இவருக்குப் பின்னால் ஆயிரம் வருஷத்தியக் கதை.
அதில் சின்னக் கிளைக் கதை.
கொலை, கொள்ளைகளில் கொடி கட்டிய பெயர் அவருக்கு. சாமர்த்தியமாக்க் கொள்ளையடிப்பதில் பிரசித்தி பெற்றவர், இங்கு வந்திருக்கிறார். பைரவசாமியைப் பார்த்திருக்கிறார். வணங்கியிருக்கிறார். கிணற்றில் கல் எறிந்த மாதிரி சலனம்.
மாறியிருக்கிறது மனம். அதன் இன்னொரு பக்கம் ஒளிந்திருந்த திறமையில் வெளிச்சம் பட்டுக் கவிதை பாடியிருக்கிறார். அப்படிக் கவிதையினால் அவர் காவியமே படைத்ததாகச் சொல்லப்படுகிறது. அப்படி அவர் எழுதியதாகச் சொல்லப்படும் காவியம் – ராமாயணம்.
அந்தக் கவிஞர் வால்மீகியாம்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பத்தூரில் இருக்கிற யோக பைரவருக்குப் பின்னணியில்தான் இந்தக் கதை. திருப்பத்தூரின் அந்தக் காலத்திய பெயர், வால்மீகிபுரம். பிறகு தமிழில் புத்தூராகி, முன்னால் ‘திரு’ என்கிற அடைமொழி சேர்ந்து திருப்பத்தூர்.
பெயரில் மட்டுமல்ல, பைரவரைப் பற்றிச் சொல்லப்படும் இன்னொரு கதையிலும் ‘ராமாயண வாசனை!’.
ராமர், சீதைக்குக் குழந்தை பிறந்தது இங்குதானாம். பெயிரிடுகிறார்கள் ‘லவன்’. அந்தச் சமயம் குழந்தையை அருகிலிருந்து கவனித்துக் கொண்டவர் வால்மீகி.
ஒரு சமயம், குடிநீர் எடுத்துவர வெளியே போகிறாள் சீதை. பக்கத்திலிருக்கிற முனிவரான வால்மீகியிடம் தொட்டிலில் கிடந்த குழந்தையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுப் போகிறாள். போனதும் சிறிது நேரத்தில் கண்மூடி இருந்த முனிவரின் நிஷ்டையைக் கலைக்காமல் குழந்தையை மெதுவாகத் தூக்கிக்கொண்டு வெளியே சென்று விடுகிறாள் சீதை. சிறிது நேரம் கழித்துக் கண் விழிக்கிறார் வால்மீகி. குழந்தையைக் காணவில்லை. வருந்துகிறார். தன் கையிலிருந்த தர்ப்பைப் புல்லைத் தொட்டிலில் போடுகிறார். உடனே அது குழந்தையாக உருவெடுக்கிறது. அச்சு அசலாக ‘லவன்’ போலவே இருக்கும் அந்தக் குழந்தை தொட்டிலில் கிடக்கும்போது சீதை உள்ளே நுழைகிறாள். அவளுக்கு அதிர்ச்சி. இன்னொரு லவனா? “இவனும் உன் குழந்தைதான்” என்கிறது அசரீரி. பிறகு இருவரையுமே வளர்க்கிறாள் சீதை.
புராண காலத்து ‘குளோனிங்...’
natpu சீதையை நினைவுபடுத்துகிற வித்த்தில் இன்றும் திருப்பத்தூரிலுள்ள ஒரு குளத்தை சீதேவி – சீதளி என்று அழைக்கிறார்கள் இங்குள்ள மக்கள்.
காசியிலிருந்த பைரவரை முருகன் இங்கு அழைத்து வந்த்தாக ஒரு கதை. காசியிலிருந்து வரும்போது தன்னுடன் கொன்றை மரக்கன்றையும் கொண்டுவந்து இங்கு நட்டாராம். ‘காசி வில்வம்’ என்கிற பெயருடன் இப்போதும் இருக்கிறது கொன்றைமரம்.
பாதங்கள் இரண்டையும் ஒருசேரப் பிணைத்து பெருவிரல்களால் பூமியை ஊன்றிய கோலத்தில் அமர்ந்திருக்கிறார் பைரவர். காதுகளில் சுருளான தோடு, கண்களில் அக்னி... இருப்பது யோக நிலையில்.
“ஆபத்து என்றால் பைரவர் உதவுவார்” என்கிற நம்பிக்கை இருப்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இங்கு வந்து வணங்கி வழிபட்டால் பல சிக்கல்கள் விலகும் என்பதும் ஒரு நம்பிக்கை.
ஒரு சமயம் சனீஸ்வரனுக்கே ஒரு சிக்கல். யமதர்மன் அவரை அலட்சியப்படுத்த, நொந்து போகிறார். தனது தாய் சாயாதேவியிடம் தன்னுடைய மனப்புகைச்சலைச் சொல்லிக் குமுறுகிறார். தாய், “நேரே போய் பைரவரைப் பார்” என்கிறார். பைரவரை தரிசிக்கிறார் சனீஸ்வரன். உடனே அவரது கிரக நிலையிலேயே மாற்றம். பலரைப் படுத்தும் சனீஸ்வரனுக்கே குரு என்றால், மற்றவர்கள்?
“சிவ... சிவ” என்கிற வாசகத்துடன் சின்னக் கோபுரம். உள்ளே நுழைந்த்தும் ஒரு புறம் சிவன், இன்னொருபுறம் முருகன். இன்னும் சற்றுத் தள்ளிப் போனால் பைரவர்.
பைரவருக்கு முன்னால் ஆடு, கோழி வெட்டுவதற்கென்றே கல்லால் ஆன தனிப்பீடம். பைரவருக்குப் பின்னால் ஒரு குளம். அதன் கரையில் மொட்டையடிக்கிறார்கள். காது குத்துகிறார்கள். சற்றுத் தள்ளி ஆடு, கோழி வெட்டத் தனியிடம். பொங்கல் வைக்கத் தனியிடம்.
எதிரிகளால் உண்டாகும் தொல்லைகள், பில்லி, சூன்யம் நீங்க அதற்கென்றே விசேஷ அர்ச்சனை செய்கிறார்கள். ஒன்பது முறை பூஜை செய்து தயிர் அன்னப் பாவாடை சாத்தி, தேங்காய் பழத்துடன் கும்பிட்டால் வழக்கில் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இதே மாதிரி பைரவருக்கு முன்னால் சிறு மிளகை சின்னத் துணியில் கட்டி, அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி அர்ச்சனை செய்கிறார்கள். அப்படிச் செய்தால் இழந்த சொத்துக்களும், பொருட்களும் திரும்பவும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பழங்காலத் தெய்வமான பைரவருக்கு மன்னர்கள் பலர் திருப்பணி செய்திருக்கிறார்கள். natpuமண்டபம் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். வீரபாண்டியன், மாறவர்மன், சுந்தர பாண்டியத் தேவர் என்று பைரவர் கோவிலைப் பராமரித்த மன்னர்களின் பட்டியல் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நீண்டிருக்கிறது.
திருஞானசம்பந்தரிலிருந்து, திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் வரை பலர் பைரவரைப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள். இப்போதும் இந்தக் கோவிலில் ‘பைரவாஷ்டமி’ என்று தனி பூஜை பகல் 12 மணிக்கு நடக்கிறது.
வாகனம் எதுவுமில்லாமல் தரை தொட்டபடி உட்கார்ந்திருக்கும் பைரவர் இன்றும் பல சமூகத்தைச் சேர்ந்தவர்களின் குலதெய்வம்.
இன்னொரு ஆச்சர்யம், மற்ற மத்த்தினரையும் ஈர்க்கக்கூடிய மையமாக பைரவர் இப்போதும் இருப்பது. முஸ்லிம்களும் வருகிறார்கள். வந்து வாசனை திரவியங்களைப் படைத்து வழிபடுகிறார்கள். கிறிஸ்தவர்களும் வந்து வழிபடுகிறார்கள்.
சமயம் கடந்து அவர்களை ஒன்றிணைக்கிறது பைரவர் மீது அவர்கள் வைத்திருக்கிற நம்பிக்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக