- பகவான் ரமண மகரிஷி
‘ஒருவன் தன்னைத் தான் அறிந்து கொள்ளுதலே, இறைவனை அறிந்து கொள்வதற்கு முதற்படியாகும்’ என்ற ஞான உபதேசத்தை அருளியவர் பகவான் ரமணர். பாலப் பருவத்திலேயே திருவண்ணாமலையைத் தேடி வந்து தஞ்சம் புகுந்தவர். தனது இறுதிக் காலம் வரை அண்ணாமலையை விட்டு நீங்காதவர்.
ரமணர் விருபாஷிக் குகையில் தங்கி இருந்த காலம். ஒரு நாள் மாலை வேலையில் திரளாக பக்தர்கள் கூட்டம் வந்திருந்தது. வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராக ஸ்ரீ பகவானை தரிசித்துக் கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் திடீரென மழை பொழியத் துவங்கியது. மெதுவாக ஆரம்பித்த மழை பேய் மழையாகக் கொட்டித் தீர்த்தது. தரிசிக்க வந்தவர்கள் யாரும் கீழே இறங்கிச் செல்ல முடியாத நிலை. மாலை கடந்து இரவும் வந்து விட்டிருந்தது. இரவு எட்டு மணியைக் கடந்து விட்டதால் ஒவ்வொருவருக்கும் நல்ல பசி ஏற்பட்டது. ஆனால் அத்தனை பேருக்கும் போதுமான உணவு கையிருப்பில் இல்லை. பகவானின் அடியவரான பழனிசாமிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பகவானின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
பகவானும், ‘சரி, சரி மழை விடுவதாகத் தெரியவில்லை. இவர்களோ பாவம் பசிக்களைப்பில் இருக்கிறார்கள். அதனால் இருக்கும் உணவை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விடு’ என்றார்.
உடனே பழனிசாமி உணவை சிறு சிறு உருண்டையாக உருட்டி வந்திருந்த பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் அளிக்கத் தொடங்கினார். அவர்களும் அந்தச் சிறு கவளங்களை ரமணப் பிரசாதமாக நினைத்து வாங்கி உண்டனர். மூன்று பேருக்கு மட்டுமே வைத்திருந்த அந்த உணவு கிட்டத்தட்ட முப்பது பேர்களுக்கு சிறு சிறு உருண்டைகளாக்கிப் பகிர்ந்தளிக்கப்பட்டது. சற்று நேரத்தில் அனைவருக்கும் வயிறு நிறைந்து விட்டதுடன் அறுசுவை உணவு உண்ட திருப்தியும் ஏற்பட்டது. தண்ணீர் கூட உட்கொள்ள முடியாத அளவிற்கு வயிறு நிறைந்திருப்பதைக் கண்டு ‘எல்லாம் ரமணரருள்’ என்று எண்ணித் தொழுதனர் பக்தர்கள்.
எல்லாவற்றிற்கும் காரண சூத்ரதாரியான ரமணரோ ஒன்றும் பேசாமல் எங்கோ மௌனமாய் நோக்கிக் கொண்டிருந்தார். எதிலும் பற்றற்று இருப்பது தானே ஞானிகளின் இயல்பு.
*******************
சதா ஞான நிலையிலேயே பகவான் இருந்து வந்த போதிலும் ஆசிரம வாழ்வில் அவருடைய நகைச்சுவை உணர்விற்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை.
ஒருநாள்… விடியற்காலை மூன்றுமணி இருக்கும். மகரிஷியை பார்க்கச் சிலர் ஆசிரமத்திற்கு வந்தனர். ஆசிரமத்தில் யாரையும் காணாததால், அவர்கள் நேரே சமையல் நடக்கும் இடத்திற்குச் சென்றனர். அங்கே ஆசிரம சமையல் பாத்திரங்களை ஒருவர் மெதுவாகக் கழுவிக்கொண்டிருந்தார். அவரிடம், ‘ஐயா இங்கே பகவான் ரமணர் எங்கே இருக்கிறார்?’ என்று கேட்டனர்.
அதற்கு அந்த மனிதரும், ’ஓ, ரமணரா, இதோ இருக்கிறாரே, இதுதான் ரமணர்’ என்று சொல்லி, தான் கழுவிக் கொண்டிருந்த அண்டாவை அவர்களிடம் காண்பித்தார். வந்தவர்களோ அவருக்குக் காது கேட்காதோ என நினைத்துக் கொண்டு, மீண்டும் அதையே கேட்டனர்.
அதற்கு அந்த மனிதர் மீண்டும் தன் கையில் இருந்த அண்டாவைக் காட்டி, ‘பாருங்கள், இதுதான் ரமணர். ரமண மகரிஷி என்று பேர் கூடப் பொறித்திருக்கிறார்களே, உங்களுக்குத் தெரியவில்லையா?’ என்றார்.
வந்தவர்கள், இவர் யாரோ சித்த சுவாதீனமில்லாத மனிதர் போலிருக்கிறது என நினைத்துக் கொண்டு தரிசன ஹாலுக்குச் சென்று அமர்ந்து கொண்டனர்.
பொழுது விடிந்தது. சற்று நேரத்தில் ‘பகவான் வருகிறார், பகவான் வருகிறார்’ என்ற குரல் கேட்டது.
அனைவரும் மரியாதையுடன் எழுந்து நின்று பார்த்தனர், அங்கே பாத்திரம் தேய்த்த அந்த மனிதர் வந்துகொண்டிருந்தார்.
அவர் தான் பகவான் ரமணர் என்று அறிந்து கொண்டதும் அவர்களுக்கு வியப்பு தாளவில்லை. அதே சமயம், பகவான் ஏன் தங்களிடம் அப்படி நடந்து கொண்டார் என்று அறிய விரும்பினர். அவரை அணுகிக் காரணம் கேட்டனர்.
அதற்கு பகவான், ‘நான்தான் பகவான்னு நெற்றியில எழுதி ஒட்டிக் கொண்டா இருக்க முடியும்.?’ என்று கேட்டார், புன் சிரிப்புடன். பின், ‘நான் என்பது இந்த உடலல்ல; இதைத் தான் நான் இத்தனை வருடங்களாகச் சொல்லிக் கொண்டு வருகிறேன். அப்படிச் சொல்லியும் என்ன பயன், எல்லோரும் அதை உணராமல் இருக்கிறீர்களே!’ என்றார் வருத்ததுடன்.
தங்களுக்காக வாழாமல் பிறர்காகவே வாழ்ந்ததால்தான் அவர்கள் மகான்கள் என்று போற்றப்படுகின்றனர்.
மகான்களின் பெருமை பேசவும் இனிதே!
*******************
ரமணரின் உபதேசங்கள்:
மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதானால் எந்தப் பயனும் இல்லை.
கர்த்தா ஒருவன். நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட கருவிகளே! இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் பணிவு வராமல் போகாது.
தீமைகளைச் செய்யாதீர்கள். புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர். தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்.
குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும் நிலையும் உண்டு.
ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம். ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ள அதுவே மிகவும் முக்கியம்.
*******************
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!
*******************