சனி, 22 ஜனவரி, 2011

ஸ்ரீ பைரவ வழிபாடு – 8

உக்ர பைரவர்

தி.வயிரவன்பட்டி: மெய்ஞானபைரவர்

திருக்கோஷ்டியூரை அடுத்து இந்த ஊர் காணப்படுவதால், தி.வயிரவன்பட்டி எனச் சுருக்கமாக அழைக்கப்படுகின்றது.

தல இறைவன் மெய்ஞான சுவாமி என அழைக்கப்படுகின்றார். லிங்கத் திருமேனியாக, கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இறைவி பாகம் பிரியாள் என்னும் பெயரில் காட்சி அளிக்கின்றாள்.

பைரவர் தெற்கு நோக்கிய திசையில் காணப்படுகின்றார். உக்ர மூர்த்தி. காபாலிகர்களால் வழிபட்டதாகத் தெரிய வருகின்றது. வழிபோடுவோருக்குச் சகல பேறுகளையும் அளிப்பவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. பல்வேறு கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. மிகவும் பழமையான ஆலயம்.

ஸ்ரீ பைரவர்

கண்டரமாணிக்கம்: ஆண்டப்பிள்ளை கால பைரவர்:

கண்டரமாணிக்கம் என்னும் ஊருக்கு அருகே இக்கோயில் உள்ளது. இக்கோயில் இறைவன் பெயர் சுகந்தவனேசுவரர். இறைவி சாமீப வல்லி

இங்கு பைரவர் காலபைரவராக, பல்வேறு அற்புத வேலைப்பாடுகளுடன் எழுந்தருளியுள்ளார். இது நவபாஷாணச்சிலை என்றும், பைரவ சித்தர் என்பவர் உருவாக்கி வழிபட்டது என்ற தகவலும் கூறப்படுகின்றது.

பிரம்ம கபாலத்தை ஏந்தியுள்ளதால் கபால பைரவர் என்றும், கால பைரவர் என்றும், நாடி வரும் பக்தர்களின் துயர் துடைத்து உடன் போக்குவதால் ஆண்டப்பிள்ளை பைரவர் என்றும் போற்றப்படுகின்றார்.

ஆதி பைரவர்

இங்கு சனீசுவரரும் தனிச் சன்னதியில் அருள் பாலிக்கின்றார்.

ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றனவாம். ஸ்தல மரம் வன்னி. வன்னி பத்திரத்தால் அருச்சனை, சமித்துகளால் ஹோமம் முதலியன செய்வது விசேடம் எனக் கூறுகின்றனர்.

வன்னிமரம் சாட்சி சொன்ன திருவிளையாடல் இந்தத் தலத்தில் அரங்கேறியதாகவும் கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக