வயிரவன்பட்டி: பைரவர்
நகரத்தார்களுக்கென்றுள்ள ஒன்பது கோயில்களுல் மிக முக்கியமானது வயிரன்பட்டியாகும்.
இங்கு இறைவன் வளரொளிநாதர் எனப்படுகின்றார். பைரவர் நின்ற திருக்கோலத்தில் தனிச் சன்னதியில் அருள் பாலிக்கின்றார். பொதுவாக சிவாலயங்களில் இறைவனுக்கு இடப் புறம் அன்னை வீற்றிருப்பாள். ஆனால் இங்கு அன்னை வீற்றிருக்க வேண்டிய இடத்தில் அதற்குப் பதிலாக ஸ்ரீ பைரவர் வீற்றிருக்கின்றார். அதன் பிறகு தான் அன்னை ஸ்ரீ பைரவருக்கு இடப்புறம் காட்சி தருகிறாள்.
அதாவது முதலில் சிவன் கிழக்கு நோக்கிக் காட்சி தர, அதனைத் தொடர்ந்து ஸ்ரீ பைரவர் தெற்கு நோக்கியும், அதனைத் தொடர்ந்து அன்னையும் தெற்கு நோக்கியும் காட்சி தருகின்றாள். இது வேறு எங்கும் காணப்படாத, இத்திருக்கோயின் மிக முக்கியமான சிறப்பம்சமாகும். இதன் மூலம் அன்னையின் பணியையும் ஸ்ரீபைரவரே ஏற்றுச் செய்வதாக நம்பப்படுகின்றது.
அஷ்டமி போன்ற தினங்களில் சிறப்பு ஹோமம் முதலியன செய்யப்படுகின்றன.
ஸ்ரீபைரவர் இங்கு நின்ற திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன், ஞமலி வாகனத்துடன் காட்சி தருகின்றார். ஒரு கையில் சூலம், மறு கையில் உடுக்கை, நாக பாசம் முதலியன ஏந்தியவாறு காட்சி தருகின்றார். இடையில் நாகாபரணம் அணிந்துள்ளார். சத்ரு சம்காரத்திற்கும், ஏவல் முதலிய செய்வினைக் கோளாறுகளை நீக்குவதிலும் நிகரற்றவர்.
விநாயகர், முருகர் முதலியோர் தனிச் சன்னதியில் வீற்றிருக்கின்றனர்.
கோயிலின் வெளிப்புறத்தே கருப்பண்ணசாமி எழுந்தருளி உள்ளார். ஆனால் அவருக்கு உருவம் கிடையாது. வெறும் வாள், ஈட்டி, வேல் போன்ற ஆயுதங்களே அங்கு வழிபடப்படுகின்றன. இதுவும் ஒரு சிறப்பாகக் கருதப்படுகின்றது. கோயிலின் வெளியே அழகிய திருக்குளமும், மண்டபமும் காணப்படுகின்றது. மிகவும் அமைதியான சூழலில் கோயில் உள்ளது.
இக்கோயில் காரைக்குடியிலிருந்து பிள்ளையார்பட்டி செல்லும் வழியில் அமைந்துள்ளது. பேருந்து நிலையத்தில் இறங்கி சுமார் 1 கி..மீ நடக்கவேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக