சனி, 22 ஜனவரி, 2011

ஸ்ரீபைரவர் வழிபாடு – 2

முதல் பைரவர்:

பைரவ மூர்த்தங்களில் மொத்தம் 108 வகைகள் உள்ளதாகக் கூறப்படுகின்றது. அவற்றில் முதன்மையானதும், மூலமானதாகவும் விளங்குவது ஆதி பைரவராகும்.

யோக பைரவர், திருப்பத்தூர்

இந்த ஆதி பைரவர் எழுந்தருளியுள்ள தலம் திருப்பத்தூர் திருத்தளி நாதர் ஆலயம் ஆகும். இத்தலம் காரைக்குடி திருப்பத்தூர் மார்க்கத்தில், பிள்ளையார்பட்டி, குன்றக்குடிக்கு வெகு அருகே உள்ளது. இஃது பல சிறப்புகள் வாய்ந்த தலமாகும். மகாலட்சுமிக்காக இறைவன் கௌரி தாண்டவம் ஆடிய திருத்தலமாகும். இங்கு மகாலட்சுமி, நாராயணர் என இருவரும் தனித்தனியாக யோக கோலத்தில் வீற்றிருக்கின்றனர்.

இத்தலத்தின் ஒரு புறத்தில் தனிச் சன்னதியில் பைரவர் காணப்படுகின்றார்.

இவர் சிறப்புகள்:

உலகில் தோன்றிய முதல் பைரவர் இவர் தான் என இந்த ஆலயக் குறிப்பு கூறுகின்றது. அதானால் இவர் ‘ஆதி பைரவர்’ என அழைக்கப்படுகின்றார். பொதுவாக பைரவர், பெரும்பாலான இடங்களில், கையில் சூலத்துடன், நாய் வாகனத்துடன், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதே ஐதீகம். ஆனால் இங்கு பைரவர் அமர்ந்த நிலையில், யோக நிஷ்டையில், காணப்படுகின்றார். அதனால் யோக பைரவர் என்றும் அழைக்கப்படுகின்றார். இந்திரன் மகன் ஜெயந்தனைக் காப்பதற்காக இவர் திரு அவதாரம் செய்ததாக இத் திருக்கோயில் குறிப்பு கூறுகின்றது. சஷ்டி, அஷ்டமி போன்ற நாட்களில் இவருக்கு சிறப்பு ஆராதனை, அபிஷேகம், வழிபாடு, யாகங்கள் செய்யப்படுகின்றது. இவற்றில் கலந்து கொண்டாலோ அல்லது இங்கு வந்து வழிபாடு செய்து வேண்டிக் கொண்டாலோ சத்ரு பயம், ஏவல் போன்ற தொல்லைகள், வியாபாரக் கஷ்ட நஷ்டங்கள், வேலை பற்றிய பிரச்னைகள் நீங்குவதாக நம்பிக்கை.

ஸ்ரீ பைரவர்

இந்த பைரவர் மிக உக்ரமானவர். அவர் தம் உக்ரத்தைக் குறைக்க, வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பாக, அவரை சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளதே இதற்குச் சான்று. . பூஜை முதலியன முடிந்த பிறகு அவர் அமர்ந்திருக்கும் பகுதிக்கு ஆலய அர்ச்சகர்களே கூட செல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு உக்கிரமானவர்.

தேய்பிறை அஷ்டமி அன்று இவருக்கு வடை மாலை சாற்றி வழிபடுகின்றனர். ராகுகாலம் போன்ற நேரங்களிலும் இவருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகின்றது. சத்ரு தொல்லை, ஏவல், பில்லி, சூனியம், காரியத்தடை, திருமண எதிர்ப்பு போன்றவை விலக இவரை வழிபடுதல் சிறப்பு. அதற்காக சிறப்பு ஹோமங்களும் அர்ச்சனை வழிபாடுகளும் இவ்வாலயத்தில் செய்யப்படுகின்றன.

அமைவிடம்:

திருப்பத்தூரிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை செல்லும் சாலைக்கு அருகே இவர் எழுந்தருளியுள்ள திருப்பத்தூர் திருத்தளிநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அருணகிரி நாதர், நாவுக்கரசர் போன்றோரால் பாடல் பெற்ற தலம். புற்று வடிவில் வான்மீகி வழிபட்ட தலம் ஆதலால் ‘திருப்புத்தூர்’ என்றழைக்கப்பட்டு, பின்னரு மருவி ‘திருப்பத்தூர்’ ஆகி விட்டது.

பிள்ளையார்பட்டி, குன்றக்குடி செல்லும் அன்பர்கள் அவசியம் இத் திருத்தலத்தைத் தரிசிக்கவும். திருப்பத்தூர் பேருந்து நிலையத்தின் அருகிலேயே இக்கோயில் அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக