ஸ்ரீ மஹா பிரத்தியங்கரா அஷ்டகம்.
காப்பு
முக்கண்ணன் ஈன்ற முழு முதலே முத்தமிழே
பக்கலிலே உனக்கு வல்லபை-உச்சிஷ்ட
கணபதியே சோளிங்க நல்லூரிலே வாழும்
குணசீலக் குன்றாம் துணை
1. பல்லாயிரம்கண்னால் கருணை மழை பொழியும்
அதர்வணக் காளி நீயே
சொல்லாயிரத்தா லுன்னைத் துதித்திடவே மகிழும்
பரசிவா னந்தவடிவே
எல்லோரும் எப்போதும் ஏற்றங்கள் பலபெறவே
சோளிங்க நல்லூரில் வாழ்
நல்லவளே நாயகியே வல்வினைகள் தீர்க்கும்மெங்கள்
அன்னையே ப்ரத்தியங் கிரா
2. சின்னக் குழந்தை பிரகலாதனைக் காக்க (ச்)
சீறிய சிங்க வடிவாய் (ச்)
சொன்ன வண்ணமே தூணில் வெளிப்போந்த நரசிம்மன்
அசுரனை வதை உக்கிரம்
முன்னம் நீ சரபரின் இறக்கையாய் வந்தணைத்து (ச்)
சினம் தணிந்திட்ட தாயே
சன்னிதியால் சஞ்சலங்கள் வல்வினைகள் தீர்க்குமெங்கள்
அன்னையே ப்ரத்தியங் கிரா.
3. மதிசூடி விரிசடையான் துணையாய்க் காத்யாயனீ
சாமுண்டா முண்ட மர்த்தினீ
துதிகாளி சாந்தா த்வரிதர வைஷ்ணவீ பத்ரா
கரு உருக் கொண்ட சூலி
அதிநீல ஆடையாளே பாச முண்ட சூலமுடன்
டமருக ஸர்ப்ப பாணியு நீ
கதியாகவே வந்து வல்வினைகள் தீர்க்கும் எங்கள்
அன்னையே ப்ரத்தியங் கிரா.
4. நெடுநாவில் உதிரம் சிந்தும் நெஞ்சில் நீள் கபால மாலை
மின்னல் உன்கண் ணாகுமே
படுத்தும் பில்லிசூன்யமகல ராஜசிம்ம வாஹினி
நீயே ஏகாந்த யோகினி
துடிப்பான செம்பூவும் படையலுக்குச் செம்பழமும்
ஏற்கும் பைரவ பத்தினியே
அடுத்துக் கெடுக்கும் வல்வினைகள் தீர்க்குமெங்கள்
அன்னையே ப்ரத்தியங் கிரா
5. ஓராணி வேராய்விளங்கும் மந்திர பீஜமான
க்ஷம் அவளுக்கே உவப்பே
இருடியர் அங்கிரஸர் ப்ரத்தியங்கிரஸர் எனும்
இருமுனிவர் நாம வடிவே
திருப்பாதம் ஆணவத்தைச் சவமாக்கி மேல் நிற்கும்
தேவிஉபாசகர் காவல் நீ
உருவாகும் குரோதங்கள் வல்வினைகள் தீர்க்குமெங்கள்
அன்னையே ப்ரத்தியங் கிரா
6. பக்தர் மனங்குளிரப் பார்த்து அருள் சொரியும்
உன் கண்கள் ஈராயிரம்
கத்தும் கடலலையாய்க் கதறும்எம் குறை கேட்கும்
உன்செவிகள் ஈராயிரம்
புத்தி பிறழாமலே நாம் வாழவே உதவும்
உன் கைகள் ஈராயிரம்
சித்தமலம் அறுத்து வல்வினைகள் தீர்க்குமெங்கள்
அன்னையே ப்ரத்தியங் கிரா
7. குண்டலினி சக்திதனை ஆக்ஞையிலே ஏற்றுவிக்கும்
அனந்தா வாக்தே வியும் நீ
கண்டார்க் கெல்லாம் களிப்பே ஆவரணப் பூசைதனில்
அனங்க மாலினி யும்நீயே
கொண்ட சஞ்சலம் பீதி ஆயாசம் யாவையுமே
நீக்கும் மாதா கௌலினீ
அண்டங்கள் அனைத்திலும் வல்வினைகள் தீர்க்கும்
எங்கள்அன்னையே ப்ரத்தியங்கிரா
8 சத்ருபய சங்கட சர்ப்பதோஷ நாஸினீ
ஜெய ஜெய ஸ்ரீ ப்ரத்தியங்கரா
சித்த சுத்தி நல்கிடும் துரிதவர தாயினீ
ஜெய ஜெய ஸ்ரீ ப்ரத்தியங்கரா
சுத்த ஏழுகோடி தன்னில் ஸ்ரேஷ்ட மந்த்ர ரூபிணி
ஜெய ஜெய ஸ்ரீ ப்ரத்தியங்கரா
உத்தம இகபரச் சுகங்கள் யாவும் நல்குவாய்
ஜெய ஜெய ஸ்ரீ ப்ரத்தியங்கரா.
ஆக்கியவர்பழனிபால இரவிச்சந்திரன். நன்றி.
ப்ரத்தியங்கரதேவி மூல மந்திரம்
ஒம் அபராஜிதாய வித்மஹே
ப்ரத்தியங்கிராய தீமஹி
தன்னோ உக்கிர ப்ரசோதயாத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக