திங்கள், 26 செப்டம்பர், 2011

வடுக பைரவர்: பிரான்மலை

வடுக பைரவர்: பிரான்மலை


ஆகாயம், பூமி, பாதளம் என மூன்று நிலைகளில் காணப்படும் ஒரே ஆலயம் பிரான்மலை கொடுங்குன்ற நாதர் ஆலயம் தான். வள்ளல் பாரி ஆண்ட பறம்பு மலையே தற்போது பிரான் மலை என போற்றப்படுகின்றது.

இங்கு மங்கைபாகர் சன்னதி ஆகாய நிலையில் விளங்குகின்றது. இது மேல் பகுதியில் விளங்குகின்றது.

வடுகபைரவர், விநாயகர் மற்றும் தஷிணாமூர்த்தி சன்னதி பூமி என்ற நிலையில் காணப்படுகின்றது. அதாவது ஆகாயநிலைக்குக் கீழே, பாதாள நிலைக்கு மேலே நடுத்தரமாகக் காணப்படுகின்றது.

அதன் கீழே கொடுங்குன்ற நாதர் சன்னதி காணப்படுகின்றது. இது பாதாள நிலை எனக் கூறலாம்.



இந்த நடுத்தரமான பூமி நிலையில், சூலம், உடுக்கை, கபாலம், நாகபாசம் போன்றவற்றைக் கொண்டவராக விளங்குகின்றார் இந்த வடுக பைரவர்.

வடுகன் என்றால் பிரம்மச்சாரி என்ற பொருள் உண்டு. வீரன் என்ற பொருளும் கூறப்படுகின்றது. அதற்கேற்றால் போல் சற்று உக்ரமான தோற்றத்துடன் காணப்படும் இவருக்கு, வீரத்தின் அடையாளமான வாள் சார்த்தி வைக்கப்படுள்ளது. நின்ற திருக்கோலம். அரசர்களால் வழிபாடு செய்யப்பட்டதால் வீரத்தின் அடையாளமான வாள் சார்த்தி வைக்கப்படுள்ளதாகக் கூறப்படுகின்றது.

மற்றொரு கதையும் உண்டு. முண்டாசுரன் என்னும் அரக்கன், சிவனைத் தவிர வேறு யாராலும் தனக்கு அழிவில்லை என்ற வரம் பெற்றதால், ஆணவத்துடன் அனைவரையும் கொடுமைப் படுத்தினானாம். பிரம்மனையே அவன் போருக்கு அழைக்க, அவன் செருக்கை அழித்து அவனை அழிக்க, சிவன் ஏற்ற திருக்கோலமே ஸ்ரீ வடுகபைரவராம்.



ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றையும், காரியத்தடைகளையும் உடனடியாகக் களைபவர் இந்த வடுக பைரவர். இவருக்குக் கருப்பு வஸ்திரம் சார்த்தி, எலுமிச்சை மாலை அணிவித்து வேண்டிக் கொண்டால் உடனடியாகப் பலன் கிடைக்கும்.

அமைவிடம்:

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான இது புதுக்கோட்டை – சிவகங்கை மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ளது. மேலைச்சிவபுரி என்ற ஊருக்கு அருகில் இத்தலம் உள்ளது. சிங்கம்புணரி என்ற ஊரிலிருந்தும், பொன்னமராவதியிலிருந்தும் பேருந்துகள் உள்ளன.

மலைக்கு மேலே, சிறு ஆலயமும், இஸ்லாமியப் பெரியவரின் தர்காவும் உள்ளது. ஏறுவதற்கு மிகவும் அரியமலை. முல்லைக்குத் தேர் ஈந்த வள்ளல் வாழ்ந்ததால் இந்த ஊர் என்றும் எப்பொழுதும் பசுமையாகவும், வளமாகவும் காணப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக