திங்கள், 26 செப்டம்பர், 2011

காசி - கால பைரவர்

தேவராஜஸேவ்யமான பாவனாங்க்ரிபங்கஜம்
வ்யாலயஜ்ஞஸூத்ரமிந்து சேகரம் க்ருபாகரம் மி
நாரதாதி யோகிப்ருந்த வந்திதம் திகம்பரம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே மிமி

தேவர்களின் தலைவன் வணங்கும் திருவடியை கொண்டவரும், சந்திரனை போன்ற ஒளி பொருந்திய யஜ்ந்ஞோபவீதம் கொண்ட கருணை மிகுந்தவரும், யோகிகளால் வணங்கப்படும் யோகியர்களின் தலைவனும், உடலில் ஆடைகள் இன்றி திகம்பர நிலையில் காசி மாநகரில் இருக்கும் கால பைரவரை நான் வணங்குகிறேன்.
- ஆதிசங்கரர், கால பைரவ அஷ்டகம்

------------------------------------------------------

இறைவனை மூல சக்தியாக கண்டால் ஒன்று தான். ஆனால் இறை சக்தி செயல்படும் பொழுது பல்வேறு சக்தியாக மாற்றமடைகிறது. பிரபஞ்சத்தில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் அனுக்களால் ஆனது. அனு என்பது இதன் மூலம். ஆனால் அனைத்து பொருளும் ஒன்று போலவே இருப்பது இல்லை அல்லவா?

”கால பைரவ்” என வட மொழியில் கூறப்படும் காலபைரவர் என்ற இறை சக்தி மூல சக்தியின் பரதிபிம்பம் என்றாலும் தனித்துவமானது. காசி என்ற நகரத்தின் முழுமையான கடவுள் கால பைரவர். ஞானத்தின் வடிவமாகவும் ஞானிகளுக்கு எல்லாம் முதல் ஞானியாகவும் இருக்கும் இறைவனே கால பைரவன்.
அகோரிகள் தங்களையே இறைவனாக வணங்குபவர்கள். ஆனாலும் அவர்கள் தங்களை காலபைரவனாகவே வணங்குகிறார்கள். காலத்தைகடந்து நிற்பவர்களும், ஞானத்தை உணர்ந்து இருப்பவர்களும் கால பைரவர்கள் தான்.

நாய் காலபைரவரின் வாகனம் என்பார்கள். என்றும் விழிப்புணர்வுடன் இருக்கும் தன்மை நாயாக உருவகப்படுத்தபடுகிறது. ஆடையில்லாமல் இருப்பதே கால பைரவரின் தன்மை என்றாலும் சில கோவில்களில் கருப்பு ஆடை அணிவிக்கிறார்கள்.

கருப்பு என்ற உடை நிறங்கள் அற்ற தன்மையை சுட்டிகாட்டுவதால் அவ்வாறு கருப்பு உடை அணிவிக்கப்படுகிறது. இந்த கருத்தை நினைவில்கொள்ளுங்கள் பின்னால் இதற்கு வேலை இருக்கிறது.

கால பைரவரின் தன்மை அறியாமையை ஒழித்து ஞானத்தை வணங்குவதாகும். ஆணவம் மற்றும் மாயை என்ற மயக்கத்தில்இருப்பவர்களுக்கு தகுந்த நிலையில் உணர்வுகொள்ள செய்து ஞானத்தை வழங்குவார். ஆனால் காலபைரவரிடம் சாத்வீகமான அனுகுமுறையை எதிர்பார்க்க முடியாது. அவரின் ஒவ்வொரு செயலும் அதிரடியாகவே இருக்கும்.

ஒரு சந்தையில் ஒருவர் அனைவரையும் அழைத்து ஒரு செய்தி சொல்லுகிறார் என கொள்வோம். அந்த செய்தியை அனைவரும் கூடிகேட்பார்களா என கூற முடியாது. இதே ஒருவர் சில சாகசங்களை மக்கள் முன் செய்து அதிரடியாக ஒரு செய்தியை கூறினால் பாமர மக்களுக்கு அந்த செய்தி சென்று அடையும். கால பைரவர் ஞானம் வழங்கும் நிலை இந்த இரண்டாம் வகையை சார்ந்தது.

அகோரிகளின் ஆதி குரு காலபைரவர். அகோரிகள் தங்களை காலபைரவ ரூபமாகவே நினைக்கிறார்கள். அதனால் அகோரிகளின் சில செயல்பாடுகள் மக்களின் அறியாமையை அதிரடியாக சுட்டிகாட்டுவது போல இருக்கும். சிலர் அதில் அருவருப்படைவார்கள் சிலர் அகோரிகளை விட்டு ஓடிவிடுவார்கள்.

சில வருடங்களுக்கு முன் நான் காசி பயணத்தில் கண்டதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். அருவெறுப்பு அடையக்கூடியவர்கள் அடுத்த பத்தியை கடந்து செல்லுவது நல்லது.

கங்கை கரையில் நான் அமர்ந்திருக்கும் பொழுது நான் இருக்கும் இடத்திலிருந்து சற்று தள்ளி ஒரு அகோரி அமர்ந்திருந்தார். வெளிஊரிலிருந்து வரும் சிலர் அகோரியை கடந்து செல்லும் பொழுது வணங்கிவிட்டு சென்றார்கள். அவரும் அதை தவிர்த்து வேறுபக்கம் திரும்பி உட்கார்ந்து கொண்டார். ஆனாலும் மக்கள் விடுவதாக இல்லை. சிலர் அவரை வணங்குவதை பார்த்த மேலும் சிலர் அந்த அகோரியை வணங்க துவங்கினார்கள். ஆனால் அனைவர் முன்னிலையில் யாரும் சற்று எதிர்பாராத சூழலில் அருகில் இருந்த மலத்தின் ஒருபகுதியை கைகளில் எடுத்து சுவையாக உண்ணத் துவங்கினார் அந்த அகோரி. அவ்வளவுதான் அங்கே ஒரு ஈ காக்கா இல்லை. வணங்கத்தக்க ஒருவர் மலம் தின்றுகொண்டிருந்தால் நம் மக்கள் புனிதராக பார்க்குமா? சொல்லி புரியவைப்பதில்லை அகோரிகள்...!

ஒளரங்கசீப் காலத்தில் செல்வம் கொள்ளை என்பதை தாண்டி மத திணிப்பு மற்றும் மதப்போர்கள் நடந்துகொண்டிருந்தது. காசியை இஸ்லாமிய புனித நகரமாக மாற்ற முயற்சி செய்துவந்தார் ஒளரங்கசீப். ஒருபுறம் கடினமான போர் தந்திரம் மற்றும் பிரம்மாண்டமான போர் படை என ஒளரங்கசீப் இருந்தாலும் மக்கள் ஒற்றுமை மற்றும் அவர்களின் குழப்பம் விளைவிக்கும் செய்கை ஆகியவற்றால் முகலாய சக்ரவர்த்தியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

காசியில் சந்துகளை கட்டி குழப்பம் விளைவித்தனர். சிலர் எங்கு பார்த்தாலும் சிவலிங்கங்களை அமைத்து அதை வணங்கினார்கள். இதனால் ஒளரங்கசீப் குழப்பம் அடைந்தார். முடிவில் சில சூழ்சிகளும் தந்திரங்களை செய்து விஸ்வநாதர் கோவிலை கண்டுபிடித்து முற்றிலும் சிதைத்தார். அங்கே இந்த சுயம்பு சிவலிங்கத்தை சுக்குநூறாக்கினார்.

விஸ்வநாதர் கோவில் சிதைக்கவருகிறார்கள் என்றும் கைமீறி போகிறது என்பதையும் தெரிந்துகொண்ட சிலர் சுயம்பு லிங்கத்தை எடுத்து கோவிலுக்கு அருகில் இருக்கும் கிணற்றில் வீசிவிட்டார்கள். சுயம்பு லிங்கம் இருந்த இடத்தில் வேறு ஒரு பாணலிங்கம் வைக்கப்பட்டது.

ஒளரங்கசீப் சிதைத்தது சுயம்புலிங்கத்தை அல்ல..!

சிதைத்தது மட்டுமல்லாமல் விஸ்வநாதர் கோவில் இருந்த இடத்தில் பெரிய மஸ்ஜித் கட்டி தொழுகை நடத்தினார் ஒளரங்கசீப். இன்று விஸ்வநாதர் கோவில் என மக்கள் வழிபடும் இடம் முன்பு விஸ்வநாதர் கோவில் இருந்த இடம் அல்ல. முன்பு மூலஸ்தானத்தை பார்த்து இருந்த நந்தி இப்பொழுது மசூதியை பார்த்து நிற்கிறது.


ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட படம்.விஸ்வநாதர் கோவில் இருந்த இடத்தில் கட்டப்பட்ட மசூதி. புகைப்படத்தின் வலது கோடியில் சிதிலம் அடைந்த கோவில் கோபுரம் தெரியும்.

தற்சமயம் இருக்கும் காசி விஸ்வநாதர் தங்க கோபுரம். பின்புறம் மசூதி.

நந்திக்கு அருகில் இருக்கும் கிணற்றில்தான்
இன்றும் விஸ்வநாதர் இருக்கிறார். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வரை பல முறை சிதைத்து மறுபடியும் மறுபடியும் கட்டபட்டது விஸ்வநாதர் கோவில். முகலாய பேரரசு வீழ்ந்ததும் தற்சமயம் இருக்கும் விஸ்வநாதர் கோவில் வடிவம் பெற்றது. இன்றும் அந்த கேணிக்கும், மசூதிக்கும் துணை ராணுவ பாதுகாப்புகொடுக்கப்படுகிறது. அரசியலில் இன்றளவுக்கு சிவன் முக்கிய துருப்பு சீட்டு இல்லை. இருந்தால் ராம ஜென்ம பூமி என்பதற்கு பதில் நம் ஆட்கள் சிவ ரவுத்திர பூமி என கூவ துவங்கி இருப்பார்கள்.

ஞானகேணி பழைய படம்.கேணியின் வலது பக்கம் மசூதி,
இடது பக்கம் கோவில் என இரண்டுக்கும் மையத்தில் அமைந்துள்ளது.

விஸ்வநாதர் கோவிலில் இருக்கும் கேணியை ஞானக்கேணி என கூறுகிறார்கள். இதில் இருக்கும் நீர் தீர்த்தமாக குடித்தால் ஞானம்
கிடைக்கும் அறிவு பெருகும் என நம்பிக்கை நிலவுகிறது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் விஸ்வநாதர் கோவிலை பூஜிப்பவர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. இவர்கள் பாண்டாக்கள் எனஅழைக்கப்பட்டனர். இவர்கள் வரும் மக்களிடம் பணம் பறிப்பது, மேலும் தாங்கள் உயர்ந்தவர்கள் என காட்டிக்கொள்வது போன்ற துவேஷங்களை செய்து வந்தனர்.

கங்கையில் குளித்துவிட்டு சிறிது நீரை எடுத்து வந்து விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்வது
பக்தர்களின் வழக்கமாக இருந்தது. அதற்கு மிகப்பெரிய வரிசையாகவும், நீர் அபிஷேகம் செய்வதே ஆன்மீகத்தின் முக்கிய நிலை என்றும் மக்கள் நம்பத்துவங்கினார்கள். இவ்வாறு அறியாமை பெறுக விஸ்வநாதர் கோவிலை பூஜை செய்துவந்தவர்களும் காரணமாக இருந்தார்கள்.

மக்களின் அறியாமையை அதிரடியாக போக்கும் தன்மை கொண்டவர்கள்தான் அகோரிகள் என்று சொன்னேன் அல்லவா? அதற்கு வேளை வந்தது. ஞான கேணியில் இருக்கும் விஸ்வநாதரை கண்டுகொள்ளாமல் மக்கள் தங்கள் விஸ்வநாதரை பூஜிக்கிறோம் என்ற அகந்தை மற்றும் அறியாமையில் இருப்பதை கண்ட அந்த அகோரி கூட்டமாக இருந்த விஸ்வந்தாரர் கோவிலுக்குள் சென்று அந்த காரியத்தை செய்தார்.

அனைவர் முன்னிலையிலும் திடீரென சிறுநீரை நேராக சிவலிங்கத்தின் மேல் செலுத்தினார். அனைவரும் அறுவெறுப்படைந்து வெளியேரினார்கள். தனது கையில் இருக்கும் சங்கை எடுத்து மிகவும் சப்தமாக ஒலி எழுப்பி பிறகு கூறினார்....

உங்களுக்குள் இருக்கும் விஸ்வநாதரை வணங்கு....
உன் ஞானம் என்ற கங்கையால் அபிஷேகம் செய்..

இவ்வாறு கூறிவிட்டு ஒடி மறைந்தார் அந்த அகோரி. அனைவரும் உணரத்துவங்கினார்கள்.

இன்று மக்கள் வணங்கும் விஸ்வநாதர்.

அகோரிகளின் குழுவை அகடா என கூறுவார்கள். அகோரிகளின் இந்த குழுவை தவிர அகோரிகளின் ஆற்றல் பெற்றவர்கள் பலர்
இருக்கிறார்கள். அகோரிகள் தங்களின் ஆற்றலை பிறருக்குள் செலுத்தி அவர்களை கருவியாக்கி சமூகத்தை தூய்மையாக்குவார்கள்.

காசி மாநகரம் சென்ற பலருக்கு அகோரிகளின் ஆற்றல் மாற்றபட்டாலும், முக்கியமாக சிலருக்கு இப்படி மாற்றம் செய்யபட்டு அவர்கள் கருப்பு உடையில் நம் சமூகத்தை வலம் வந்தார்கள். ஒருவர் பாரதி மற்றொருவர் பெரியார்...! கருப்பு என்பது சமூகத்திற்கு எதிர்ப்பு காட்ட வேண்டும் என்பது மட்டுமல்ல காலபைரவரின் நிறம் அது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

காசி நகரமே காலபைரவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் காசி நகருக்கு சென்று திரும்பும் எவரும் ஏதோ ஒருவிதத்தில் தங்களுக்குள் மாற்றம் நிகழ்ந்திருப்பதை உணர்வார்கள்.

நன்றி ! & webdhunia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக